சர்வகட்சி மாநாடு குறித்து மைத்தரியின் கருத்து !!
அரசாங்கத்துக்கு விசேட உதவிகளை வழங்குவதற்காக சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, அனைத்து தரப்பினரையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் நேற்று (21) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்தை பலப்படுத்துவது நோக்கம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சில அரசியல் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ள நிலையில், சிலர் தங்களது கொள்கைகளின் அடிப்படையில் அழைப்பை நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் மக்களின் சுமைகளிலிருந்து விடுபடுவதற்கான வேலைத்திட்டத்தை வகுப்பதற்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.