;
Athirady Tamil News

கண்டியில் காணாமல் போன சிறுமி யாழ் பஸ் தரிப்பிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்!!

0

கண்டி, கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இராசலிங்கம் பிரியதர்சினி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்திலிருந்து 11ஆம் திகதி காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அச்சிறுமி காணாமல் போனமை தொடர்பில், ஊடகங்களில் வெளியான செய்தியை அவதானித்த வர்த்தகர் ஒருவர்இ சிறுமி பஸ் தரிப்பிடத்தில் இருப்பதை கண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

சிறுமி கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர் கண்டி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் நாளை, நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்றும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

11ஆம் திகதி காலை இதற்கமைய தான் யாழ்ப்பாணத்திலுள்ள தனது நண்பியைத் தேடிச் சென்றதாகவும், செல்லும் வழியில் தனது அலைபேசி செயலிழந்த்தால் நண்பியுடன் தொடர்புகொள்ள முடியாமல் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வீட்டாருடன் ஏற்பட்ட மனகசப்பால் தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு, 5ஆம் திகதி மாலை யன்னல் வழியாக வீட்டிலிருந்து வெளியே பாய்ந்து, திகனையிலுள்ள அவரது நண்பி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு நான்கு நாள்கள் தங்கியிருந்த குறித்த சிறுமி, அந்த வீட்டிலிருள்ளவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய தனது வீட்டுக்குச் செல்வதற்காக கண்டி பஸ் தரிப்பிடத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவரது கையில் 9,000 ரூபாய் பணம் இருந்ததாகவும், அந்த பணத்தில் 4,000 ரூபாய் செலவில் அலைபேசி ஒன்றை கொள்வனவு செய்து, தனது வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் யாழ்ப்பாணத்திலுள்ள தனது நண்பியின் சகோதரியொருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி, தனக்கு தொழில் ஒன்றை பெற்றுத் தருமாறு தெரிவித்துள்ளார்.

எனினும் தொழில் செய்வதற்கு வயது போதாது என்றும் அதுவரை விடுதியொன்றில் தங்கியிருக்குமாறும் அச்சகோதரி தெரிவித்ததையடுத்து, அச்சிறுமி யாழ்ப்பாணம் செல்வதற்காக கண்டியிலிருந்து பஸ் ஏறியுள்ளார்.

கண்டியில் 7 மணிக்கு வவுனியா பஸ்ஸில் ஏறி 11 மணியளவில் வவுனியாவை சென்றடைந்துள்ளார். பின்னர் இரவு முழுவதும் வவுனியா பஸ் தரிப்பிடத்தில் தங்கியிருந்த குறித்த சிறுமி அதிகாலை 4.20 மணியளவில் யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் ஏறி, யாழில் உள்ள நண்பியின் சகோதரியுடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது. சிறுமியின் அலைபேசி பெட்டரி செயலிழந்துள்ளது.

இதன்போது பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்று. தனது அலைபேசியின் பெட்டரியை சார்ஜ் செய்து தரும்படி கேட்டபோதே, அந்த வர்த்தகர் சிறுமியை அடையாளம் கண்டு பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த சிறுமியின் சகோதரி மற்றும் உறவினர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, சிறுமியை அழைத்து வந்து, கலஹா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் சகோதரி மற்றும் தாயிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் கலஹா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.