;
Athirady Tamil News

25 கேன்களில் டீசல் சிக்கியது !!

0

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகில் 25 சிறிய கேன்களில் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

அக்கரைப்பற்றில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அத்தியாவசிய சேவைக்காக கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும் கேன்கள் இவ்வாறு பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியாகின்றன.

இந்நிலையில் இன்று (26) நண்பகல் 25 சிறிய கேன்களில் டீசல் நிரப்பப்பட்ட உழவு இயந்திரமும் அக்கரைப்பற்று பிரதேசம் நோக்கி புறப்படுவதாக பொதுமக்கள் அறிந்து கொண்டனர். அதன்பின்னர் பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகே ஒன்று கூடிய மக்கள், உழவு இயந்திரத்தை தடுத்து நிறுத்தி பொலிஸாருக்கு தகவலை வழங்கினர்.

இந்நிலையில் அங்கு வருகைதந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார், உழவு இயந்திரத்தை கைப்பற்றி அதில் உள்ள கலன்களில் டீசல் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு உழவு இயந்திரத்தை ஓட்டிச்சென்றனர்.

ஆயினும், பொலிஸ் நிலையம் வருகை தந்த சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவை தங்களது அமைப்புகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்ததுடன் அதற்கான ஆவணங்களையும் பொலிஸார்டம் கையளித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

விவசாய அமைப்புக்களுக்கு இவ்வாறு மொத்தமாக டீசலை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டா? அவ்வாறெனில் அனுமதியை வழங்கியது யார்? வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் காத்திருக்க இது போன்ற செயற்பாடுகள் முறையானதா? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.