அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 42 திட்டங்களுக்கான பரிந்துரைகள் தயார்
2026இல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் 42 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் முன்னுரிமை அடிப்படையில் 42 திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டங்கள் குறித்தான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படு அங்கு இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் அனுமதி பெற்று மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில்,திட்டங்கள் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத் தீர்மானத்துடன் மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அனுப்பப்படும் திட்டங்கள் மாத்திரமே சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றார்.