யாழில் முழுமை பெறாத வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய – ரூ.1350 மில்லியன் தேவை
யாழ். மாவட்டத்தில் 2018 மற்றும் 2019 காலப்பகுதியில் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு 1350.98 மில்லியன் தேவையான யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற போது அரச அதிபர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்:
2018 மற்றும் 2019 காலப்பகுதியில் வழங்கப்பட்ட வீட்டு திட்டங்கள் இன்னும் நிறைவு செய்யப்படாமல் காணப்படுகின்றன. இதனால் பயனாளிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மழை காலங்களில் குறித்த வீட்டு திட்டங்களில் வாழும் மக்கள் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பது அவசியம்.
இந்நிலையில் இம்மக்களின் கஷ்ட நிலைமை தொடர்பில் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மாவட்ட செயலாளர் என்ற எடுத்தரைத்து குறித்த வீட்டுத்திட்டத்தில் வாழும் மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை முன் வைத்துள்ளேன்.
குறிப்பாக முழுமை அடையாத வீடு திட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்றார்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் துறை சார் அமைச்சருடனும் அதிகார சபை தலைவருடனும் கலந்துரையாடி முடிவு ஒன்றை எடுக்க முடியும் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.