;
Athirady Tamil News

வண்ணாத்தவில்லு களஞ்சியசாலை விவகாரம் – நால்வருக்கு பிணை!!

0

புத்தளம் வண்ணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த புத்தளத்தை சேர்ந்த நால்வருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் ட்ரயல் அட்பார் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சந்தேக நபர்கள் நால்வருக்கும் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் வண்ணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு சந்தேக நபர்களுள் முதலாம், இரண்டாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேக நபர்களுக்கே இன்றைய தினம் புத்தளம் மேல்நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டன.

மேற்படி சந்தேக நபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மற்றும் முஹம்மது சஜாத், நதீஹா அப்பாஸ் , முஹம்மது அத்னான், முஹம்மது அல்தாப் ஆகியோர் பிணை கோரும் பிணை விண்ணப்பத்தினை சமர்பித்திருந்தனர்.

இதனை பரிசீலனை செய்வதற்கான காலத்தை மூவரடங்கிய நீதிபதிகள் வேண்டியிருந்தனர். இதனடிப்படையிலேயே இவர்களுக்கான பிணை இன்றே வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி நபர்களுக்கு தலா ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா ரொக்கப் பிணனையும், தலா இருபது லட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பினைகளிலும் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நபர் சார்பில் சட்டத்தரணிகளால் பிணை கோரப்பட்ட போதிலும் அவர் சார்பில் கோரப்பட்ட பிணை விண்ணப்பம் நீதிபதிகளால் இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் நான்காவது சந்தேக நபராக பெயரிடப்பட்டவர் சார்பில் எதிர்வரும் நாட்களில் பிணை கோரும் விண்ணப்பம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மீண்டும் விசாணைக்கு எடுக்கப்படவுள்ளது.

புத்தளம் மேல்நீதிமன்ற வரலாற்றில் மேற்படி வழக்கு விசாரணையே ட்ரயல் அட்பார் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.