;
Athirady Tamil News

கோத்தகிரி-கன்னேரிமுக்கு சாலையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கியது..!!

0

சாலையில் மண்சரிவு

கோத்தகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகள் மற்றும் குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்யும் பணி, தடுப்புச்சுவர்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள குண்டூசி வளைவை விரிவாக்கம் செய்து தடுப்புச்சுவர் கட்டும் பணி, அதே சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வந்த பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யபட்டது. அதில் ஒரு பணி நிறைவு பெற்றது. ஆனால் கன்னேரிமுக்கு செல்லும் சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வரும் பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த மண் திட்டு வெட்டி அகற்றப்பட்டது. இருப்பினும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

துண்டிக்கப்படும் அபாயம்

இந்த நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், பலத்த மழையின் காரணமாக மண் திட்டு இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இந்த திட்டு இடிந்து விழுந்தால் மேற்புறம் உள்ள தார்ச்சாலை சேதமடைவதுடன், கன்னேரிமுக்கு செல்லும் சாலை என 2 முக்கிய சாலைகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. மேலும் இந்த 2 சாலைகள் வழியாக ஏராளமான குக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் மினி பஸ்கள், தனியார் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே நெடுஞ்சாலை துறையினர் விரைந்து தடுப்புச்சுவரை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது.

பணி தொடங்கியது

இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதுடன், தடுப்புச்சுவர் கட்டும் பணியை தொடங்கி முழு வீச்சில் செய்து வருகின்றனர். அந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யபட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு, மாற்றி அமைக்கும் பணிகளும் உதவி கோட்ட பொறியாளர் கணேசன் மற்றும் செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.