;
Athirady Tamil News

காற்று மாசைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது- மத்திய வேளாண்துறை மந்திரி பேச்சு..!!

0

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில்,பயிர் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்றவற்றால் டெல்லியில் காற்று மாசு அளவு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் எனவும் 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு விளையாட்டு உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற வேளாண் ஆராய்ச்சி பயிலங்கில் பங்கேற்று பேசிய மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளதாவது: அரசியல் ரீதியாக இந்த பிரச்சனையை விவாதிப்பதை விட, இதற்கு தீர்வு கண்டு இதிலிருந்து வெளி வருவதற்கான முயற்சிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் விவசாயிகளின் நலனை நோக்கமாக கொண்டே செயல்படுகின்றன. பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது தீவிரமான பிரச்சினை. இது சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு முறையாக தீர்வு காண்பதன் மூலம் மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். பயிர்க்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்து சுற்றுச்சூழல் மாசைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

பயிர்க்கழிவு மேலாண்மைக்காக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கி உள்ளது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் புசா என்ற உயிரி பயிர்க்கழிவு சிதைப்பு திரவம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றை திறம்பட பயன்படுத்தி பயிர்க்கழிவுகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.