;
Athirady Tamil News

74 மண்ணெண்ணெய் பவுசர்கள் விடுவிப்பு !!

0

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள் இன்று (23) விடுவிக்கப்பட்டுள்ளதாக கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

இதற்கமைய, 49 தனியார் துறை எரிபொருள் நிரப்பு நிலையங்கள், 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய 07 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனுமதி வழங்கப்பட்டிருந்தும் பணம் செலுத்தாத காரணத்தால் நேற்று (22) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று (23) மண்ணெண்ணெய் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில் இதற்கு தேவையான நிதி வசதிகள் கூட்டுறவு கிராமிய வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீனவ மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு நேற்று (22) முதல் வழங்கப்பட்டுள்ளது.

வத்தளை ஹெந்தல, பேருவளை (மீனவத் துறைமுகம்), ஹெந்தல விஜேசிங்க, காலி, அஹுங்கல்ல, தங்காலை, நுரைச்சோலை, புத்தளம், சிலாபம் வெல்ல, சிலாபம் அலுத்வத்த, வல்வெட்டித்துறை, புதுக்குடியிருப்பு, ஊர்காவற்றுறை, மைலிட்டி, தலையடி, குருநகர், களுவாஞ்சிக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 28 எண்ணெய் பவுசர்கள் நேற்று முன்தினம் (22) விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடற்றொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 14 துறைமுகங்களில் உள்ள மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படும்.

நவம்பர் 22 ஆம் திகதி முதல் தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே மீனவர்களுக்கு அவசியமான எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மீனவர்களின் எரிபொருள் தேவை தொடர்பில் தற்போது காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களும் கடற்றொழில் திணைக்களமும் ஆராய்ந்து வருகின்றன.

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருளைப் பெறுவதில் ஏதேனும் சிரமம் இருப்பின், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அல்லது மாகாண பிரதம செயலாளர்கள், கூட்டுறவுச் செயலாளர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியின் சமூக விவகாரப் பிரிவு, மீனவ சங்கங்களையும், வர்த்தகர்களையும் அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.