;
Athirady Tamil News

ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன்- அடித்துக் கூறிய சுகேஷ் சந்திரசேகர்..!!

0

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து வெளியே வந்த அவரிடம், ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சுகேஷ், ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி ரூபாய் வழங்கியதாக மீண்டும் கூறினார். ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழு சுகேஷின் வாக்குமூலத்தை எடுத்து, தீவிரமான இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக் வலியுறுத்தினார். எனவே இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அமைத்த குழுவிடம் சுகேஷ் அளித்த வாக்குமூலத்தில், சிறையில் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெறுவதற்காகவும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.