;
Athirady Tamil News

அமெரிக்காவில் வலம்வரும் கோட்டா!!

0

அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

கொழும்பு நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் ஜூலை 9-ம் திகதி நுழைந்தனர். அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து வெளியேறினார். மக்கள் போராட்டம் வலுவடைந்ததால் ஜூலை 13-ம் திகதி அவர் மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார். மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்தவாறே அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

ஏறத்தாழ 4 வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றார்.

அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பியபோதிலும், விசா கிடைக்கவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் திகதி இலங்கை திரும்பினார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு, கொழும்புவில் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ச வசிக்கும் மாளிகைக்கு அருகே உள்ள அரசு மாளிகை ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இலங்கையில் தங்கியிருந்த கோட்டாபய, தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கோட்டாபய தனது மனைவி அயோமா ராஜபக்ச, மகன் மனோஜ் ராஜபக்ச, மருமகள் செவ்வந்தி ராஜபக்ச மற்றும் பேரன் ஆகியோருடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அதிகாரத்தில் இல்லாத நிலையில் அமெரிக்காவிலேயே குடியேறவும் அவர் முடிவு செய்துள்ளதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள அவரது நெருங்கிய உறவினர்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரம், செல்வாக்கு, பதவி போன்றவற்றை இழந்த நிலையில், இனி தாய்நாட்டில் வசிக்க வேண்டாம் என்று அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.