;
Athirady Tamil News

அமலுக்கு வந்தது இந்தியா-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மகிழ்ச்சி..!!

0

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே முறையான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் வழிவகுக்கிறது. இதனால் இந்திய நுகர்வோருக்குத் தரமான பொருட்களை மலிவான விலையில் கிடைக்கும் என்றும், இந்தியாவில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய யோகா ஆசிரியர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் மூலம் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி விசா மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருதரப்புக்கும் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்புக்கு முக்கியமான தருணம் இதுவாகும். இந்த ஒப்பந்தம் நமது வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிணைப்பில் திறன்களை மகத்தான முறையில் அதிகரிப்பதுடன் இருதரப்பு வணிகங்களையும் வலுப்படுத்தும். இந்தியாவில் விரைவில் உங்களை வரவேற்கும் தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.