;
Athirady Tamil News

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை மீட்க ராக்கெட் அனுப்புகிறது ரஷியா!!

0

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக அடுத்த மாதம் 20ம் தேதி மீட்பு விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்ப உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் கூறியிருப்பதாவது:- ரஷிய விண்வெளி வீரர்களான செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் மற்றும் நாசா விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ ஆகியோரை பூமிக்கு அழைத்து வர முதலில் அனுப்பட்ட எம்எஸ்-22 விண்கலம் ஒரு சிறிய விண்கல் மோதியதால் சேதமடைந்துள்ளது. எனவே, அவர்களுக்காக சோயுஸ் எம்எஸ்-23 ராக்கெட் பிப்ரவரி 20ம் தேதி ஆட்கள் யாரும் இன்றி செலுத்தப்பட உள்ளது.

சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பும். இவ்வாறு விண்வெளி நிறுவனம் கூறி உள்ளது. விண்வெளி நிலையத்தில் தற்போது 7 பேர் உள்ளனர். அவசர காலத்தில் வீரர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்றால் விண்வெளி நிலையத்தில் நான்கு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரே ஒரு மீட்பு விண்கலம் மட்டுமே உள்ளது. தற்போது எம்எஸ்-22 ராக்கெட் தகுதியற்றதாகக் கருதப்படுவதால் அதற்கு மாற்றாக மற்றொரு விண்கலம் ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.