;
Athirady Tamil News

ஷாபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி உலகம் முழுவதும் சுற்றுகிறார் – இம்ரான் கான் தாக்கு!!

0

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 2 ஆண்டாக அந்நாடு கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தநிலை, கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட பெருவெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையே, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடந்த ஆண்டு ஆகஸ்டு காலகட்டத்தில் அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியது. பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் தேவையான நிதியை விடுவிக்க உதவ வேண்டும் என அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று திரும்பினார்.

தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்குச் சென்றார். சில அரசு சார்ந்த கூட்டங்களிலும் பங்கேற்றார். நிதி உதவி கோரி ஐக்கிய அரபு அமீரக பயணமும் மேற்கொண்டார். ஷாபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய 2 நாள் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின்போது தற்போதுள்ள 200 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை நீட்டிக்க அமீரகம் ஒப்புதல் அளித்ததுடன், கூடுதலாக 100 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை தருவதற்கும் ஒப்புக் கொண்டது.

கடந்த கோடை காலத்தில் பருவகால பாதிப்புகளால் நாட்டை சூறையாடிய வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உதவியாக ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர் வழங்கப்படும் என, ஜெனீவா மாநாட்டின்போது சர்வதேச நாடுகள் உறுதி வழங்கியிருந்தன. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரசு பாகிஸ்தானுக்கு என்ன செய்கிறது என பாருங்கள். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி வெவ்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் யாரும் அவருக்கு ஒரு பென்னி நாணயம் கூட வழங்கவில்லை.

ஷெரீப், இந்தியாவிடம் கூட பேச்சுவார்த்தைக்காக கெஞ்சி கொண்டு இருக்கிறார். ஆனால், முதலில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் (அதன்பின் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை பற்றி பரிசீலனை செய்யலாம்) என புதுடெல்லி அவரிடம் கூறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.