;
Athirady Tamil News

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த எவரும் கலந்துகொள்ளப் போவதில்லை – அருட்தந்தை சிறில் காமினி!!

0

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக மக்களின் 200 மில்லியன் ரூபா வீணடிக்கப்படுவது பெரும் குற்றமாகும்.

உண்மையான சுதந்திரம் நாட்டில் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த எவரும் கலந்துகொள்ளப் போவதில்லை என கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று புதன்கிழமை (பெ. 1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 200 மில்லியன் ரூபா செலவில் சுதந்திர தினம் கொண்டாடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தளவு பிரம்மாண்டமாக கொண்டாடுமளவுக்கு நாம் என்ன வெற்றிகளை பெற்றுள்ளோம்?

நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் எண்ணி பெருமைபடக்கூடிய சூழல் நாட்டில் காணப்படுகிறதா? மக்களின் வாழ்க்கைச் செலவு பாரதூரமாக அதிகரித்துச் செல்கின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான சிறுவர்கள் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எரிபொருளையும் கூட கடனுக்கு பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்றல் உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளுக்கு கல்வியையும் உணவையும் வழங்க முடியாத நிலைமையில் பெற்றோர் துயரடைந்துள்ளனர்.

இவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டங்கள் அடக்கப்படுகின்றன. மக்களுக்காக செயற்பட வேண்டிய பொலிஸாரும் சட்டமா அதிபர் திணைக்களத்தினரும் அரசியல்வாதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

நாட்டில் சட்டக் கட்டமைப்பு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையால் சமூகம் மாத்திரமின்றி, பாடசாலை கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது.

நாட்டுக்குள் போதைப்பொருளை கொண்டு வரும் பிரதான நபர்களை கைதுசெய்யும் இயலுமையற்ற பொலிஸார், மாணவர்களின் பாடசாலை பைகளை சோதனையிடுகின்றனர். மறுபுறம் அரசியல்வாதிகளின் ஊழல்களும் மோசடிகளும் இலஞ்சம் பெறுதலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

உரிமைக்காக போராடும் மக்களின் குரல் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் ஒடுக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்படும் இந்த நாட்டில் என்ன சுதந்திரம் இருக்கிறது?

எனவே, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக மக்களின் 200 மில்லியன் பணம் செலவிடப்படுவது பெரும் குற்றமாகும். மக்களின் பணம் இவ்வாறு வீணடிக்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். எனவே, இம்முறை சுதந்திர தின நிகழ்வில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த எவரும் கலந்துகொள்ளப் போவதில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.