;
Athirady Tamil News

எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது – பிரதமர் தினேஷ்!!

0

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது. இதுதொடர்பில் அவர்களிடம் எந்த உறுதியான வேலைத்திட்டமும் கிடையாது.

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு திட்டங்களை முன்வைத்து வருவதுடன், பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை அதிகரிப்பதற்கான திட்டமும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை இரண்டாவது தினமாக இடம்பெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்பு தொடர்பில் நம்பிக்கை தரும் முன்னேற்றம் காணப்படுவதுடன், பரிஸ் க்ளப் ஆதரவும் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது.

நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்து அந்நிய செலாவணி நிலைமை சுமுகமாகி வருகின்றமை சர்வதேசம் இலங்கை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

பல்வேறு நெருக்கடிகள், சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ள ஒத்துழைப்பு காரணமாக நாட்டின் விவசாயத்துறை சிறப்பாக முன்னேற்றமடைந்துள்ளது. அதற்கான திட்டங்களை மேலும் சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாமல், நாடு வங்குரோத்து நிலையில் காணப்பட்ட வேளையில் சர்வதேச ரீதியிலான எமது பிரவேசம் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

கடன் தொடர்பான நம்பிக்கையை மீள ஸ்தாபிப்பது தொடர்பில் இக்காலகட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன், அதற்கு சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புக்களும் கிடைத்து வருகின்றமைக்காக அந்த நாடுகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

சர்வதேச நாணயத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் சாத்தியமாகாது என எதிர்க்கட்சி தெரிவித்து வந்த நிலையில், அவர்களது கூற்றை இப்போது அவர்களே விழுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எதிர்க்கட்சியினர் வெறும் வாய்வீச்சை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.

விமர்சிப்பதிலேயே காலம் கடத்துகின்றனரே தவிர எந்த உருப்படியான வேலைத்திட்டமும் அவர்களிடம் கிடையாது. அதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை உணர்ந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எதிர்க்கட்சியின் செயற்பாடாக இருக்க வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.