;
Athirady Tamil News

செங்கோட்டை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த குருத்திகா!!

0

தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகா(22) என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 27-12-2022 அன்று நாகர்கோவிலில் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து குருத்திகா, வினித்தின் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி குற்றாலம் போலீஸ் நிலையத்துக்கு வினித், குருத்திகா உள்ளிட்டோர் வந்து விட்டு திரும்பினர். குத்துக்கல்வலசையில் ஒரு மர ஆலை அலுவலகத்தில் இருந்தபோது நவீன் பட்டேல் மற்றும் சிலர் அங்கு புகுந்து அவர்களை தாக்கி குருத்திகாவை காரில் கடத்தி சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து நவீன் பட்டேல் மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். குருத்திகா மற்றும் அவரது பெற்றோர் கேரளா, கோவா, குஜராத் போன்ற இடங்களுக்கு மாறி மாறி சென்றனர். இதனை போலீசார் அவர்களது செல்போன் சிக்னல் மூலம் பார்த்து சென்றபோது, வெவ்வேறு இடங்களுக்கு சென்றதால் அவர்கள் சிக்கவில்லை. அவர்களை பிடிக்க தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் குஜராத்தில் முகாமிட்டு தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கில் திடீர் திருப்பமாக குருத்திகா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர், “நான் நன்றாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஏற்கெனவே மைத்ரிக் பட்டேலுடன் திருமணமாகிவிட்டது. நான், அவர் மற்றும் எனது பெற்றோருடன் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு எந்த விதமான பிரஷரோ, டார்ச்சரோ கிடையாது” என்று கூறியிருந்தார். இதற்கிடையே வினித் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது மனைவி குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்று விட்டனர். அவர் குஜராத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை என்னுடன் சேர்த்து வைக்கும் வேண்டும். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கு குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருகிற மார்ச் 1-ந்தேதி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது. இதற்கிடையே குருத்திகாவை போலீஸ் விசாரணைக்காக ஆஜர்படுத்த அவரது பெற்றோர் வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. மதுரை விமான நிலையத்திற்கு அவர்கள் வந்தால், அங்கு பெற்றோரிடம் இருந்து குருத்திகாவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையே குருத்திகாவை போலீஸ் விசாரணைக்காக ஆஜர்படுத்த அவரது பெற்றோர் வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். பின்னர் மதுரை நீதிமன்றத்தில் குருத்திகா ஆஜரானார். குருத்திகாவை இரண்டு நாட்களுக்கு காப்பகத்தில் தங்க வைத்து ரகசிய வாக்குமூலம் பெறவும், அவருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது, யாரும் குருத்திகாவை சந்திக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், குருத்திகாவை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், குருத்திகாவை இன்று செங்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு, குற்றவியல் நடுவர் சுனில் ராஜா முன்னிலையில் குருத்திகா ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தில் குருத்திகா என்ன சொல்லி இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. வாக்குமூலம் முடிந்த பிறகு போலீஸ் பாதுகாப்புடன் குருத்திகாவை காப்பகம் அழைத்துச் சென்றனர். சீல் வைக்கப்பட்ட வாக்குமூலம், 13ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.