;
Athirady Tamil News

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு!!

0

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.

இவர்களைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:- என் பயணத்தை பாருங்கள் எனது பாதை புரியும். பல விமர்சனங்களை கடந்து, சரியான பாதை என்று தான் வந்துள்ளேன்.

நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தைப் பாருங்கள், எனது பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.