;
Athirady Tamil News

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை சென்ட்ரல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியது!!

0

இந்தியாவில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 46 ஜோடி ரெயில்கள் உள்பட 200 எக்ஸ்பிரஸ் ரெயில்களை சென்ட்ரல் ரெயில் நிலையம் கையாளுகிறது.

தினமும் சராசரியாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக புறப்படும் ரெயில்களின் எண்., சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது. அதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்கள், புறப்பட்ட ஊர், ரெயில் எண், வந்து சேரும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற விவரங்களும் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த டப்பிங் கலைஞரும், கல்லூரி விரிவுரையாளருமான கவிதா முருகேசன் தமிழ் அறிவிப்புகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை `அமைதியான ரெயில் நிலையம்’ என்று அறிவித்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்ட்ரல் ரெயில் நிலையம் அமைதியான ரெயில் நிலையமாக மாறுவதால் இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படாது.

அதற்கு பதிலாக, ரெயில்கள் புறப்பாடு, வருகை, ரெயில் எண், நடைமேடை போன்ற விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும். எனவே அனைத்து டிஜிட்டல் தகவல் பலகைகளும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பயணிகளின் வசதிக்காக தகவல் மையங்களில் போதுமான ஊழியர்களை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். அதன்படி சென்ட்ரல் ரெயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியது. விமான நிலையங்கள் போல, நிமிடத்துக்கு நிமிடம் ரெயில்கள் குறித்த விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பானது.

அதைப்பார்த்து பயணிகள் விவரங்களை தெரிந்து கொண்டு பயணம் செய்தனர். பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தம், புறநகர் ரெயில் முனையம், வால்டாக்ஸ் சாலையில் 5-ம் எண் கேட் ஆகிய 3 நுழைவு பகுதிகளிலும் தமிழ், ஆங்கிலம், இந்தியில் ரெயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை காட்டும் பெரிய டிஜிட்டல் திசைகள் வைக்கப்பட்டுள்ளன. மமாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக நுழைவு ரெயிலில் பிரெய்லி நெத்துக்களுடன் கூடிய வரைபடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை அவர்களுக்கு வழிகாட்டுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் சைகை மொழி வீடியோ மூலம் அறிய கியூஆர் குறியீடுகள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சென்னை சென்ட்ரலில் சோதனை ரீதியாக அறிவிப்புகளை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பது நிறுத்தப்பட்டு டிஜிட்டல் பலகையில் மட்டும் தகவல்களை பெறும் நடைமுறையில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, ரெயில்கள் குறித்த விவரங்களை பயணிகள் தெரிந்து கொள்ள தகவல் மையங்கள் செயல்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப தகவல் மையங்கள் அதிகரிக்கப்படும். பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப அமைதி ரெயில் நிலையம் என்ற நிலை நிரந்தரமாக்கப்படும் என்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஒலிபெருக்கி அறிவிப்புகள் இல்லாதது எந்தவித ஏமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. டிஜிட்டல் பலகையில் அறிவிப்பு வெளியாவதால் ரெயில்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள வசதியாக உள்ளது என்றனர். ஆனால் சில பயணிகள் கூறுகையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு இல்லாதது கடைசி நேரத்தில் வரும் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ரெயில் பயணிகளை விமான பயணிகளுடன் ஒப்பிட முடியாது என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.