;
Athirady Tamil News

தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!!

0

தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 – 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் இதே காலகட்டத்தில் 36 லட்சம் புதிய தொற்றுகளும் 25 ஆயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இது அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது முறையே 27 சதவீதம் மற்றும் 39 சதவீதம் குறைவாகும். ஒட்டுமொத்த போக்கு இவ்வாறாக இருக்க சில நாடுகளில் சமீப காலமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் ஆரம்பத்திலிருந்து 2023 மார்ச் 26ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 76.1 கோடி தொற்றுகளும், 6 கோடியே 80 லட்சம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் 18,130 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 1.3 புதிய தொற்றுகள் என்ற விகிதாச்சாரத்தில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தோனேசியாவில் 8,405 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 3.1 புதிய தொற்றுகள் என்றளவில் உள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தில் மட்டும் 27 ஆயிரம் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது மார்ச் 27க்கு முந்தைய 28 நாட்கள் புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டால் 152 சதவீதம் அதிகமாகும். தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளில் 7 நாடுகளில் கரோனா தொற்று 20 சதவீதம் அல்லது அதற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே கரோனா பரவல் அதிகமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தற்போதுள்ள XBB.1.5 திரிபை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுதவிர மார்ச் 22 பட்டியலில் கண்காணிக்கப்பட வேண்டிய திரிபுகளில் BQ.1, BA.2.75, CH.1.1, XBB, XBF and XBB.1.16 ஆகியன உள்ளன என்றும் கூறியுள்ளது.

XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் மரபணு மாற்றமான XBB 1.16 என்ற வைரஸ்தான் தற்போது நிறைய பேரை பாதிக்கக் காரணமாக இருக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.