;
Athirady Tamil News

டெல்டா பகுதியை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது- அன்புமணி குற்றச்சாட்டு!!

0

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆன்லைன் சூதாட்டம் எதிர்ப்பு மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர் தான் காரணம். 19 பேர் உயிரிழந்தது மட்டுமன்றி, தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வந்து விட்டது. மின்மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் என்.எல்.சி இல்லை என்றால் தமிழகம் இருளில் மூழ்கும் என அமைச்சர் பொய்யான தகவலை தெரிவிக்கிறார். என்.எல்.சி அடுத்த ஆண்டு தனியார் வசம் ஒப்படைக்க உள்ள நிலையில், அரசு கைக்கோர்க்க வேண்டிய அவசியம் என்ன?

காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநில அரசிடம் இது தொடர்பாக கேட்டால், எங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். மத்திய அரசுடன் மாநில அரசு கைகோர்த்து செயல்படுகிறது. என்.எல்.சி தரும் மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை. டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு பிடி மண் கூட எடுக்க விடமாட்டேன். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். சட்டப்பேரவையில் என்.எல்.சி நிறுவனத்திற்கு, 6 சுரங்கங்களுக்கான அனுமதி கிடையாது என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எப்படி நிலக்கரி சுரங்கம் அமைக்க முடியும்?. ஏலம் அறிவிக்கப்பட்ட 6 திட்டங்களில் 5 திட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகிறது. மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு எப்படி ஏலம் விடும்?. ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம். நீட் தேர்வு 100 சதவீதம் தேவையில்லை. தமிழகத்தில் கல்வியின் தரம் மிக குறைவாக உள்ளது. நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான பயிற்சி பள்ளிகளில் கிடைப்பது இல்லை. அரசு வழங்கும் பயிற்சியும் அரைகுறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு 2 ஆண்டுகளாகியும் ஒன்றும் செய்யவில்லை. இதனிடையே நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு மிகவும் வரவேற்கதக்கது.

தமிழகத்தில் பல குற்றங்களுக்கு போதை பொருட்கள்தான் காரணமாக உள்ளது. அதனை முழுமையாக அரசு தடுக்க வேண்டும். மதுவால் அரசுக்கு வருவாய் கிடைப்பதாக அமைச்சர் பெருமையாக சொல்கிறார். இது பெருமை அல்ல, அரசுக்கு வெட்கக்கேடு. தாய் மொழி படிக்காமல் பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இந்த பெருமை திராவிட கட்சிகளுக்கு தான் சேரும். தமிழகத்தில் எங்கே தமிழ் எனும் நிலைதான் உள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் தமிழ் புரட்சி நடக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு எம்.பி.சிக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கருணாநிதி வழங்கினார். இதில் வன்னியர் சமுதாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க.விடம் ஆட்சி இருந்தால் 6 மணி நேரத்தில் ஜாதி வாரியாக பணி ஒதுக்கீடு தகவலை எடுத்திருப்போம். ஆனால் சமூக நீதி பேசும் அரசு, சமூக நீதியை கடை பிடிப்பதில்லை. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில், நேரடி ஐ.ஏ.எஸ் பதவி கடந்த ஆண்டுதான் முதன்முதலில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, உள் ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க.வின் இலக்கு 2026 சட்டபேரவை தேர்தல்தான். அப்போது ஒருமித்த கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். மே இறுதிக்குள் இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு அரசு தீர்வு காணவில்லை என்றால் சமூக நீதி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கவுரவத் தலைவர் ஜி.கே மணி, எம்.எல்.ஏக்கள் அருள், சதாசிவம், வன்னியர் சங்கம் மாநிலச் செயலாளர் கார்த்தி, தேவதாஸ், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் விஜயராசா, ராஜசேகரன், ஜெயபிராகஷ், மாவட்ட தலைவர் கதர் ராஜரத்தினம், மாணிக்கம், விஜி, சுமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.