;
Athirady Tamil News

கொரோனா தடுப்பூசிகளை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்ய வேண்டும்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

0

கொரோனா தொற்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து சுகாதார மதிப்பாய்வு செய்ய பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறையினர் பங்கேற்று மதிப்பீடுகளை மேற்கொண்டனர். நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பு, தளவாடங்கள், மருந்துகள் போன்றவை தயார் நிலையில் வைப்பது மற்றும் தடுப்பூசி பிரசாரத்தில் கவனம் செலுத்துவது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், சர்வதேச அளவிலும் கொரோனா நிலைமையைப் பற்றிய விரிவான விளக்கத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலர் ராஜேஷ் பூஷண் வழங்கினார். நாட்டில் பதிவான கொரோனா தொற்றுகளில் பெரும்பான்மையாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பதிவாகி உள்ள புள்ளிவிவரத் தகவல்களை அவர் எடுத்துரைத்தார். மேலும், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று அதிகரிப்பு காணப்படுவது குறித்தும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. பின்னர் பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.மிஸ்ரா கூறுகையில், உள்ளூர் அளவில் கொரோனா தொற்று பரவலை நிர்வகிப்பதற்கு வட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இருப்பது அவசியம்.

மாநிலங்களுடன் கலந்தாலோசித்து அதை உறுதிப்படுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும், இன்புளூயன்சா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்ட பரிசோதனை மாதிரிகளை முழு மரபணு வரிசை முறைக்கான ஆய்வுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார். மத்திய சுகாதார அமைச்சகத்தின் எந்த முன் அனுமதியும் இல்லாமல் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தேவையான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.