அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியா வருகை: அமெரிக்க மந்திரி தகவல்!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை மந்திரி டொனால்டு லு நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய-அமெரிக்க உறவில் இந்த ஆண்டு ஒரு மிகப் பெரிய ஆண்டாக அமைந்திருக்கிறது. ஜி-20 வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தை கடந்த மாதம் இந்தியா சிறப்பாக நடத்தியதை நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்த ஆண்டு அதுபோல மேலும் பல ஜி-20 கூட்டங்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்பதை அமெரிக்கா எதிர்நோக்கி இருக்கிறது. அதில், வருகிற செப்டம்பரில் புதுடெல்லியில் நடைபெறும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாடும் அடங்கும். அதில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியா செல்கிறார். அதை அவர் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளார்.
அது இந்தியாவுக்கு அவரின் முதல் பயணமாக இருக்கும். இந்தியாவின் ஜி-20 தலைமை, உலகில் ஒரு நன்மை பயக்கும் சக்தியாக அதன் திறனை விரிவாக்கி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட ‘குவாட்’ உறுப்பினர் நாடுகளில் நடக்கும் ஜி-20 கூட்டங்கள் போன்றவை, நமது நாடுகளை மேலும் நெருக்கமாக்கும் வாய்ப்பை உருவாக்கி இருக்கின்றன. குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பாக நடத்தியதையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.