;
Athirady Tamil News

நீரிழிவு நோய் தொடர்பான சந்தேகங்களும்… தீர்வும்..!!

0

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார். கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியுமா? (மு.பெனாசிர் பேகம், தூத்துக்குடி) பதில்: ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்கு உள்ளே செல்ல இன்சுலின் தேவைப்படுகிறது. பொதுவாக செல்களின் வெளிப்புறத்தில் உள்ள சவ்வு உறை (மெம்ப்ரேன்) நீரை வெறுக்கும் (ஹைட்ரோபோபிக்) தன்மையுள்ளது. ஆனால் குளுக்கோஸ் நீரை விரும்பும் (ஹைட்ரோபிலிக்) தன்மையுள்ளது.

இதனால் குளுக்கோஸால் செல்களுக்குள்ளே நேரடியாக செல்ல முடிவதில்லை. இது செல்களுக்குள் மூன்று முக்கியமான புரதங்களின் மூலம் தான் செல்லமுடியும். அவை: 1. சோடியம் சார்ந்தில்லாத குளுக்கோஸ் டிரான்ஸ்போர்டர் (ஜி.எல்.யு.டி)புரதம், 2. சோடியம் சாராத குளுக்கோஸ் சிம்போர்டர்ஸ் (எஸ். ஜி. எல்.டி) புரதம், 3. குளுக்கோஸ் யுனிபோர்ட்டர் (ஸ்வீட் புரதம்) பெரும்பாலான செல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புரதங்கள் இருக்கும். பொதுவாக செல்களின் உள்ளே இருக்கும் ஜி.எல்.யூ.டி புரதம் செல்களின் மேலே வெளிப்படுவதற்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் இல்லாமல் செல்களுக்கு உள்ளே குளுக்கோஸ் செல்ல முடிவதில்லை. அதனால் தான் ‘செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரியும் சாவி’ என்று இன்சுலின் அழைக்கப்படுகிறது.

கேள்வி: சர்க்கரை நோயினால் இரவு நேரங்களில் தூக்கமின்மை நேருமா? (உஷா, காஞ்சிபுரம்). பதில்: நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் தூக்கமின்மை நேரலாம். ஏனென்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடுவதால் தூக்கம் தடைபடுகிறது. அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது (சர்க்கரை தாழ்நிலை) தூக்கமின்மை, கெட்ட கனவுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தம் அல்லது மனநல பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகம். மன அழுத்தத்தால் இவர்களால் சரியாக தூங்க முடிவதில்லை.

நீரிழிவு நோயினால் நரம்பியல் பாதிப்பு (டயாபட்டிக் நியூரோபதி) ஏற்படும்போது கை, கால்களில் வலி, மதமதப்பு, எரிச்சல், தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். நீரிழிவு நோயாளிகளில் 21 சதவீதத்தினருக்கு ஏற்படும் ‘ரெஸ்ட்லஸ் லெக் சின்ட்ரோம்’ (ஆர்.எல்.எஸ்) எனப்படும் நரம்பு கோளாறில் தூக்கத்தில் கால்களில் விரும்பத்தகாத உணர்வு ஏற்பட்டு, கால்கள் அமைதியற்ற விதத்தில் தானாகவே நடுங்குவதால் தூக்கம் தடைப்பட்டு தூக்கமின்மை ஏற்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 77 சதவீதம் பேர் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. கேள்வி: எனக்கு 20 வருடமாக சர்க்கரை நோய் இருக்கிறது. நான் இன்னும் மாத்திரைகள் எடுத்து கொண்டு தான் இருக்கிறேன்.

இதனால் எனது சிறுநீரகம் பாதிப்பு அடையுமா?. எனக்கு வயிற்றில் எரிச்சலும் அதிகமாக இருக்கிறது. இது எதனால்? (கண்ணன், தஞ்சாவூர்) பதில்: நீங்கள் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியான அளவு எடுத்துக்கொண்டால் மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது. உங்களுக்கு ஒரு வேளை நீரிழிவு நோயாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரை மாத்திரைகளின் அளவையோ அல்லது மாத்திரைகளையோ மாற்றலாம். சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது அதன் வேலைப்பளுவை குறைப்பதற்காக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும் சர்க்கரை மாத்திரைகள் அளவை குறைத்தோ அல்லது வேறு மாத்திரைகளையோ பரிந்துரைக்கலாம்.

மேலும் எஸ்.ஜி.எல்.டி2 இனஹிபிட்டர் மாத்திரைகள் சிறுநீரக பிரச்சினையை மேலும் மோசமடையாமல் தடுக்கிறது என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உங்களுக்கு வயிறு எரிச்சல் ஏற்படுவதற்கு வயிற்றுப்புண் (கேஸ்ட்ரைட்டிஸ்), நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய இரைப்பை வாதம் (கேஸ்ட்ரோபெரிஸிஸ்) அசிடிட்டி, அமிலப் பின்னோட்ட நோய் (ரிப்லக்ஸ்) போன்றவை காரணமாக இருக்கலாம். வயிறு எரிச்சல் இருப்பதால் நீங்கள் ஏற்கனவே மெட்பார்மின் மாத்திரைகள் உட்கொள்பவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று மெட்பார்மின் மாத்திரையின் அளவை குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதற்கு பதிலாக வேறு மாத்திரைகளை மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லை என்றால் கண் பார்வை பாதிக்கப்படும் என்கிறார்கள். ரத்த சர்க்கரையின் அளவை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தால் கண் பார்வை மீண்டும் நார்மல் ஆகிவிடுமா? (சரவணன், சென்னை) பதில்: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால் விழித்திரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் விழித்திரையில் உள்ள ரத்தநாளங்கள் சேதம் அடைவதால் ரத்தக் கசிவு ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் விழித்திரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பிற்கு இது முக்கிய காரணமாக திகழ்கிறது. பொதுவாக விழித்திரை நோய் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகிறது. மீண்டும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இது மீளக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. விழித்திரை நோய் பாதித்த ஆரம்ப கட்டத்தில் வேண்டுமானால் இதிலிருந்து மீள்வது சாத்தியம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் விழித்திரை நோய் மேலும் மோசமடைவதை வேண்டுமானால் தாமதிக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.