;
Athirady Tamil News

நடைமுறையாகும் புதிய சட்டம் – புகலிட கோரிக்கையாளர்களுக்கு பேரிடி..!

0

அமெரிக்க எல்லையில் நடைமுறையில் இருந்த விதி 42 என்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடுமையான சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய புகலிட விதிகள் சட்டவிரோதமாக கடக்க முன்னெடுக்கும் முயற்சிகளை தடுக்கும் என்றே நம்பப்படுகிறது.

மெக்சிகோ எல்லையில் பல புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்திய கொரோனா கால எல்லைக் கட்டுப்பாடு விதிகளை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அத்துடன் புதிய கடுமையான விதிகளை நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளது.

இதனால் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் எவரும் நீண்ட கால தடை மற்றும் சாத்தியமான குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என்றே கூறப்படுகிறது.

எல்லைகள் மூடப்பட்டுள்ளது என அறிவித்துள்ள அதிகாரிகள், ரோந்து பணிகளுக்காக 24,000 எல்லை ரோந்து முகவர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது.

மேலும், தற்போது முதல் சட்டப்பூர்வமான வழியைப் பயன்படுத்தாமல் எல்லைக்கு வருபவர்கள் புகலிடம் பெறத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, அமெரிக்காவில் இருக்க சட்டப்பூர்வ அடிப்படை இல்லாதவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவும், அவர்களை நீக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் சில மணி நேரம் முன்னர், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஆறுகள் வழியாகவும், சுவர்களில் ஏறி குதித்தும் அமெரிக்க மண்ணில் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, எல் பாசோ நகரில் முகாமிட்டுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர் மக்கள் அடுத்து எங்கே செல்வது என்பது தொடர்பில் குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய நாட்களில் மட்டும் அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு 28,000 புலம்பெயர் மக்களை தங்கள் முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

எல்லையில் மனிதாபிமானத்துடன் செயல்படும் சூழலை உருவாக்குவதாக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும், விதி எண் 42 என்ற டொனால்ட் டிரம்ப் காலத்து கொள்கையானது நீதிமன்ற விசாரணைக்கும் கடும் விமர்சனத்திற்கும் இலக்கானது.

தொடர்புடைய விதியால் தஞ்சம் கோரும் மக்கள் உட்பட புலம்பெயர்ந்தோரை உடனடியாக வெளியேற்றுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஜோ பைடன் நிர்வாகம் அமுலுக்கு கொண்டுவந்துள்ள விதிகளின்படி, பிற நாடுகளின் எல்லைகளை பயன்படுத்தி அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் புகலிடம் பெற தகுதியற்றவர்கள். மட்டுமின்றி, உரிய சட்டப்பூர்வமான வழிகளை பின்பற்ற தவறினாலும், அவர்களுக்கும் புகலிட வாய்ப்பு மறுக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.