;
Athirady Tamil News

கர்நாடக மாநில முதல்வராகிறார் சித்தராமையா- வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா!!

0

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுப்பதால் 4 நாட்களாக புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. முன்னதாக, பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அப்போது, முதல்வர், துணை முதல்வர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.