;
Athirady Tamil News

ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவது வழக்கமான நடைமுறை தான்- ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி!!

0

2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த 20-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நாளை முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து அதற்கு பதில் வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவது, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்தி மீண்டும் வலியுறுத்துகிறேன். இது பண நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறை தான். எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை. நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி சுத்தமான ரூபாய் நோட்டு கொள்கைகளை பின்பற்றி வருகிறது. ஒரு குறிப்பிட்ட தொடரின் நோட்டுகளை திரும்பபெற்று புதிய நோட்டுகளை வெளியிடுகிறது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுகிறோம். ஆனால் அவை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக தொடர்கின்றன. அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். எனவே வணிகர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டபோது பணத்தின் மதிப்பை விரைவாக நிரப்பும் நோக்கில்தான் ரூ.2000 நோட்டுகள் முதன்மையாக வெளியிடப்பட்டன. அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இன்று போதுமான அளவு மற்ற வகை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் கூட அதன் உச்சமான 6 லட்சத்து 73 ஆயிரம் கோடியில் இருந்து சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அவற்றின் வாழ்க்கை சுழற்சியை முடித்துவிட்டன.

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 30-ந்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு போதுமான குடிநீர் உரிய இடவசதியை ஏற்படுத்தி தர கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான படிவத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். போதுமான அளவு அச்சிடப்பட்ட நோட்டுகள் உள்ளன. ரூபாய் நோட்டை மாற்ற 4 மாத காலம் அவகாசம் உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும்.

அனைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் திரும்ப வரும் என்று நம்புகிறோம். வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். உயர் மதிப்புள்ள 2000, 500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ரிசர்வ் வங்கி உணரும். 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்க வணிகர்களிடையே தயக்கம் முன்பும் இருந்தது. தற்போது திரும்ப பெறப்படுவதால் அது அதிகரித்திருக்கலாம். வங்கி கணக்குகளில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு பான் எண் தேவை. இது தற்போது ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கும் பொருந்தும். இந்திய நாணய மேலாண்மை அமைப்பு மிகவும் வலுவானது.

2 ஆயிரம் ரூபாய் பணபரிமாற்றம் தொடர்பாக நடந்துவரும் செயல்பாடுகளை வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட அதிகாரிகள் வழக்கம் போல் கண்காணிப்பார்கள். வங்கிகள் தினமும் எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக மிக குறைவாக இருக்கும். புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சியில் வெறும் 10.8 சதவீதம் மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.