;
Athirady Tamil News

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை: பினராயி விஜயன்!!

0

பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின்போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாம் அனைவரும் இந்திய குடிமக்கள். மதத்தின் அடிப்படையில் நமக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது.

ஆனால், நம் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அனைத்து கொள்கைகளையும் தூக்கி எறிந்து, ஒருவரின் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது என்பதை நிறுவுவதற்காகத்தான் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அதை (குடியுரிமை திருத்த சட்டம்) இங்கு அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா உடனடியாக அறிவித்தது. நாங்கள் இன்னும் அதில் உறுதியாக நிற்கிறோம். மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா எப்போதும் உறுதியாக உள்ளது.

இந்தியா மதச்சார்பற்ற குடியரசு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்பது நாம் பொதுவாக ஏற்றுக்கொண்டது. ஆனால் பாராளுமன்ற திறப்பு விழா என்ற பெயரில் நடத்தப்படும் செயல்பாடுகளை மக்கள் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இது முற்றிலும் மத அடிப்படையிலான விழா. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்தியாவை மதவாத நாடாக மாற்ற நினைக்கிறார்கள். அதுதான் திறப்பு விழா அன்று பாராளுமன்றத்தின் உள்ளே நடந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.