;
Athirady Tamil News

சகிப்புத்தன்மையின்மையின் உதாரணம் பிரதமர் மோடி – ப.சிதம்பரம் தாக்கு !!

0

ஒடிசாவில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து உலகையே உலுக்கியது. பல உயிர்களை பலி வாங்கிய இந்த விபத்து சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளும் பா.ஜ.க. மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பல கேள்விகளை எழுப்பி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், ரெயில்வேயின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்கு பதில் ஊடகங்களில் எப்பொழுதும் காட்சியளிப்பதற்காகவே மேலோட்டமான பூச்சு வேலைகள் மட்டும் நடைபெற்றதாகவும், ரெயில் பாதுகாப்பு சம்பந்தமாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் பாதுகாப்பு குறித்த கோஷங்கள் அனைத்தும் வெற்று கூற்றுக்கள் என வெட்ட வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உட்பட கர்நாடகத்தை சேர்ந்த 4 பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், கார்கேயின் கடிதம், உண்மைக்கு மாறாகவும் வெற்று கோஷங்கள் மட்டுமே நிறைந்ததாகவும் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர். பி.சி.மோகன், எஸ்.முனிஸ்வாமி, தேஜஸ்வி சூர்யா, சதானந்த கவுடா ஆகியோர் கார்கேவிற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் “தங்களைப் போன்ற உயர்ந்த தலைவர் ஒருவர், ‘வாட்ஸ் அப் பல்கலைக்கழகம்’ தருகின்ற ஆதாரமற்ற செய்திகளை தருவது உங்கள் அந்தஸ்துக்கு பொருந்தாத செயல். இருப்பினும், ஒருவேளை வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகி விட்ட காரணத்தினாலோ என்னவோ, அதில் படிப்பதை அப்படியே உங்கள் கடிதத்தில் தாங்கள் கொட்டிவிட்டீர்கள்” என எழுதியிருந்தனர்.

இந்நிலையில், கர்நாடக எம்.பி.க்களின் கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக் கட்சி பா.ஜ.க. கார்கேவின் கேள்விகளுக்கு பதிலாக பா.ஜ.க. எம்.பி.க்கள் எழுதியுள்ள பதில் கடிதம் ஆதாரபூர்வமற்றதாகவும், பலமில்லாத தர்க்கவாதங்களைக் கொண்டதாகவும் உள்ளது. ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கே அவர்களுக்கு பிரதமருக்கு கடிதம் எழுத எல்லா உரிமையும் உண்டு. ஜனநாயகம் உள்ள நாட்டில் பிரதமர் இதுபோன்ற கடிதத்திற்கு பதிலளிக்க வேண்டும்.

ஆனால் நம் நாட்டு ஜனநாயகத்தில் பிரதமர் பதில் கடிதம் எழுத வேண்டிய அளவிற்கு காங்கிரஸ் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என கருதுகிறார். பிரதமருக்கு பதிலாக 4 எம்.பி.க்கள் பதில் கடிதம் எழுதுகின்றனர். கார்கே எழுதியுள்ள கடிதத்திற்கு சான்றாக தலைமை கணக்கு தணிக்கையாளர் டிசம்பர் 2022 அன்று சமர்ப்பித்த கடிதங்களே போதுமானது. தென்மேற்கு ரெயில்வேயின் தலைமை செயல் அதிகாரி 2023, பிப்ரவரி 9 அன்று எழுதிய கடிதம் பாலசோரில் நடந்த விபத்துகளை முன்கூட்டியே எச்சரித்து இருந்தது. ஆனால் அக்கடிதம் தொடப்படாமல் இருந்திருக்கிறது.

அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என 4 உறுப்பினர்களும் சொல்வார்களா? குற்றங்களை துப்பு துலக்குவதற்குத்தான் சி.பி.ஐ. உள்ளதேயன்றி ரெயில் விபத்துக்களை துப்பறிவதற்கு அல்ல. சி.பி.ஐ. உள்பட சட்டத்தை அமலாக்கும் எந்த துறையும் தொழில்நுட்ப ரீதியான, அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான குறைபாடுகளை கண்டுபிடித்து, எவரையும் பொறுப்பேற்க செய்யமுடியாது. அதுமட்டுமல்லாமல் ரெயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு, சமிக்ஞைகள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் சம்பந்தமானவை பற்றிய தொழில்நுட்ப திறன் சி.பி.ஐ. வசம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.