;
Athirady Tamil News

டிஜிட்டல் முறையில் நீர் விநியோகம்: ஆராய்கிறார் ஜீவன்!!

0

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு சபை அதிகாரிகள், கொழும்பு துறைமுக நகர் ஆணையாளர், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் உட்பட துறைசார் அதிகாரிகள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘போர்ட்சிட்டி’ க்கு நீர்வழங்கலின் போது முழுமையாக டிஜிட்டல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

“நீர்வழங்கல் அதிகாரசபை கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், அதனை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதே எனது இலக்கு. அதற்கேற்ற வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, துறைமுக அபிவிருத்தி நகருக்கு நீர் வழங்களின்போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக திட்டம் வகுக்கப்படுகின்றது.” என இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இதனையடுத்து நீர்வழங்கல் அமைச்சும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சும் இணைந்து ஒரு குழுவை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.