எலான் மஸ்க்கை நாடு கடத்த முடிவா..? டிரம்ப் கூறுவதென்ன?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன.
வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாக்கள் குறித்து விமர்சித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உலகின் முன்னணியில் உள்ள தொழிலதிபரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும், கடந்த சில நாள்களாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசு செயல் திறன் துறை (’டாக்ஜ்’) என்ற துறையை உருவாக்கிய அதிபர் டிரம்ப், அதற்கு தலைவராக எலானை நியமித்திருந்தார்.
இருவருக்கும் இடையேயான கருத்துமோதல் காரணமாக அரசு செயல்திறன் துறையின் தலைமையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் கடந்த மே 29-ஆம் தேதி திடீரென அறிவித்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் தன்னுடைய கடையை மூடிவிட்டு விரைவில் சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கே செல்ல வேண்டியிருக்கும் எனத் தெரிவித்திருந்தார் டிரம்ப்.
வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாவான ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ வருகிற 4 ஆம் தேதி சட்டமாக்கப்படவுள்ளது. இதற்கு எலான் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். இருவருக்குமான பகை மேலும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது அவரிடம் எலான் மஸ்க்கை நாடு கடத்தப் போகிறீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், “எலான் மஸ்க்கை நாடு கடத்த முடியுமா எனத் தெரியாது. அதற்கான சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும். உங்களுக்கு செயல் திறன் துறை பற்றி தெரியுமா? அவரைத் தலைவராகப் போட்டோம். ஆனால், செயல் திறன் ஒரு அரக்கன். அது அவரை விழுங்கிவிட்டது.
அதிகமான வரிச்சலுகைகளைப் பெற்றுக் கொண்டது எலான் மஸ்க்தான். அவர் மின்சார வாகன ஆணையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அனைவரும் மின்சார வாகனங்களை விரும்பமாட்டார்கள்” எனக் கூறினார்.
எலான் மஸ்க்கை நாடு கடத்த வாய்ப்புள்ளதா?
எலான் மஸ்க் தன்னுடைய சொந்த நாடான தென்னாப்பிரிக்காவிலிருந்து 1992 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்து குடியேறினார். அவரது தாயார் கனடா நாட்டையும் அவரது தந்தை தென்னாப்பிரிக்காவையும் சேர்ந்தவர்கள். அவர் 2002 ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார். மேலும், அமெரிக்காவின் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்தவர் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்கின் குடியுரிமையை ரத்து செய்யாமல், அதிபர் டிரம்ப்பால் அவரை நாடு கடத்த முடியாது. இருப்பினும், ஒருவரின் குடியுரிமையைத் திரும்பப் பெறும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. மேலும், ஒருவர் மோசடி செய்து குடியுரிமை பெற்றிருந்தால் உடனே அவரின் குடியுரிமையைப் பறிக்கும் அதிகாரமும் அமெரிக்க அரசாங்கத்துக்கு இருக்கிறது.