போர்க்களத்தைப் போன்று காட்சியளியளிக்கும் பிரான்ஸ் – உச்சமடைந்த போராட்டம் !!
பிரான்ஸ் – பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நஹெல் எனும் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அங்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து தொடங்கிய போராட்டங்கள் அங்கு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நடந்தது என்ன?
போக்குவரத்து விதிமீறலுக்காக நஹல் என்ற இளைஞரை காவல்துறையினர் நிறுத்தினர். அப்போது அவரை இரண்டு அதிகாரிகள் நிறுத்திய நிலையில், ஒருவர் துப்பாக்கியை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டார்.
இது தொடர்பான பகீர் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில், “உன் தலையிலேயே நிச்சயம் தோட்டா பாயப் போகிறது” என்று சொல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அப்போது அந்த இளைஞர் திடீரென காரை எடுத்துச் செல்லவே அந்த காவல்துறை அதிகாரி சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே அங்கே போராட்டம் உச்சமடைந்தது.
ஊரடங்கு உத்தரவு
நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் ட்ராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான போராட்டங்களால், பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அங்குள்ள பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.