;
Athirady Tamil News

சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து மனித தவறே காரணம்- விசாரணை அறிக்கையில் தகவல்!!

0

மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது.

சிக்னல் மாற்றத்தால் சரக்கு ரெயில் மீது மோதி கவிழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி கள் மீது மற்றொரு பயணிகள் ரெயில் மோதியதில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது. 291 பயணிகள் இந்த விபத்தில் கொல்லப்பட்டனர். ரெயில் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ரெயில்வே பாதுகாப்பு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கை கடந்த வாரம் ரெயில்வே அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சிக்னல் மாற்றம் தொடர்பாக என்னென்ன நடந்தது? என்பது பற்றி அந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

மெயின் லைனில் சென்று கொண்டிருந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்த பாதைக்கு திரும்பியது ஏன்? என்பது பற்றியும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. 40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிக்னல் மாற்றத்தை கவனித்து இருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஸ்டேசன் மாஸ்டரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரெயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? என்பது பற்றி அந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதுபற்றி மற்றொரு குழு விசாரணை நடத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.