;
Athirady Tamil News

கள்ளக்கடத்தல் சட்டத்தை வணிகர்கள் மீது அமல்படுத்துவதா?- விக்கிரமராஜா ஆவேசம்!!

0

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு திடீரென வணிகர்கள் மீது ஜி.எஸ்.டி வரிச்சட்ட நடைமுறையின் கீழ், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படுவதாக செய்திகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியவருகின்றது. கள்ளக்கடத்தல்காரர்கள், கள்ளப் பணப்பரிமாற்றம் செய்பவர்கள், வருமான வரி இழப்பு ஏற்படுத்துபவர்கள் போன்ற நிதிநிலை மோசடிகளில் ஈடுபடக்கூடிய சட்டத்திற்கு புறம்பானவர்கள் மீது அமல்படுத்தப்படக்கூடிய அமலாக்கத்துறை சட்டநடவடிக்கை என்பது, சட்டத்திற்கு கட்டுப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு, பதிவு செய்துகொண்டு உரிய உரிமங்கள் பெற்று, அரசு அனுமதியோடு, நேர்மையான வணிகத்தை மேற்கொண்டு, தனது வாழ்வாதா ரத்தையும், தன்னை நம்பியிருக்கின்ற பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்புகான அடித்தளங்களையும் அமைத்துத் கொடுத்து அரசுக்கும், வருவாய் ஈட்டி, சுயநலமின்றி உழைத்துக்கொண்டிருக்கின்ற வணிக வர்க்கத்தின் மீது உள்நோக்கோடு திணிக்கப்படுகின்ற இந்த அமலாக்கத்துறைச் சட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில், அகில இந்திய வணிக சம்மேளனத்தின் பங்கேற்புடன் தலைநகர் டெல்லியில் உரிய ஆலோசனைக்குபின் போராட்டத்தை முன்னெடுத்து, களம் அமைத்திட தயாராக இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.