;
Athirady Tamil News

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!

0

ஈரானில் தீவிரமடையும் போராட்டம் :

ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை ஈரானில் உள்ள செயல்பாட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டு செய்தி முகமையொன்று வெளியிட்டுள்ளது. எனினும், போராட்டங்களின்போது ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த அதிகாரபூர்வ தரவுகள் ஈரான் அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.

ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. 2-ஆவது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடுமென அஞ்சப்படுகிறது.

ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டத்துக்கு அதிகாரிகள் தரப்பு ஆதரவு அளிப்பதாகவும் ஆனால் அதேவேளையில் வன்முறை சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாதெனவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டங்களில் வன்முறை நிகழாமலிருக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, ஈரானில் இணையதள வசதி ஐந்தாவது நாளாக இன்றும் முடக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுகளில் முக்கிய தளர்வாக, ஈரானிலிருக்கும் மக்கள் வெளிநாட்டு அழைப்புகளை கைப்பேசி வழியாக மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை(ஜன. 13) தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசஃப்ஸாய் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “ஈரானில் கல்வி உள்பட பொது விவகாரங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைக் குறிவைத்து அவர்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதி இது என்றும், உலகின் பிற பகுதிகளைப் போன்றே ஈரான் சிறுமிகளும் வாழ உரிமை உள்ளது” என்றும் பொருள்படக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஈரானின் எதிர்காலம் ஈரானிய மக்களால் வழிநடத்தப்பட வேண்டுமெனவும், தலைமைப் பண்பில் ஈரானிய பெண்களும் சிறுமிகளும் ஓர் அங்கமாக இருக்க வேண்டுமெனவும், வெளிநாட்டு சக்திகளும் ஒடுக்குமுறை ஆட்சியும் ஈரானில் தலைமை வகிக்கக்கூடாதெனவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.