;
Athirady Tamil News

90 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.97 கோடி ஊக்கத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

0

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 90 வீரர் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 5 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 9 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். 2022-ம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சார்ந்த எஸ். ரோஹித் கிருஷ்ணாவுக்கு 3 லட்சம் ரூபாயும், 24.10.2022 முதல் 30.10.2022 வரை ஸ்பெயின் நாட்டின்,

சாண்டாண்டரில் நடைபெற்ற ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னையை சார்ந்த எஸ். சங்கர் முத்துசாமிக்கு 4 லட்சம் ரூபாயும், 18.12.2019 முதல் 23.12.2019 வரை ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற 57-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 21 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 79 லட்சம் ரூபாயும், 2021-2022ம் ஆண்டு நடைபெற்ற சப்-ஜுனியர், ஜுனியர் மற்றும் சீனியர் தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 56 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், 1.11.2022 முதல் 6.11.2022 வரை ஜப்பான் நாட்டின், டோக்கியோவில் நடைபெற்றுள்ள பாராபேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 விளையாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு 2 கோடியே 55 லட்சம் ரூபாயும், 26.10.2022 முதல் 3.11.2022 வரை புதுடெல்லியில் நடைபெற்ற கான்டிடெனன்டல் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 விளையாட்டு வீரர்களுக்கு 15 லட்சம் ரூபாயும், 30.11.2021 முதல் 4.12.2021 வரை மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற 20-வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேலன் செந்தில்குமார் மற்றும் சவுரவ்கோசல் ஆகிய இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாயும், பெண்கள் குழுப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷனா சின்னப்பா, சுனைனா குருவில்லா மற்றும் அபராஜிதா பால முருகன் ஆகிய மூவருக்கும் தலா 5 லட்சம் ரூபாயும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.