;
Athirady Tamil News

சீனாவில் ஆசிரியையின் கொடும் செயல் – விதிக்கப்பட்டது மரணதண்டனை !!

0

சீனாவில் ஆசிரியை ஒருவரின் கொடும் செயல் காரணமாக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

இதன்படி 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்ற ஆசிரியைக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் வாங் யுன்(40). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மெங்மெங் என்ற பாடசாலையில் ஆசிரியையாகப் பணிபுரிந்துள்ளார்.அப்போது மாணவர்களை நிர்வகிப்பது தொடர்பாக சக ஊழியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வாங் யுன் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், 25 மாணவர்கள் உண்ணும் உணவில் சோடியம் நைட்ரேட் விஷத்தை கலந்து உள்ளார். இதை அறியாத மாணவர்கள், அந்த உணவைச் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஆகிய உடல் உபாதைகளுக்கு உள்ளாகினர்.அதைத் தொடர்ந்து, 25 மாணவர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 24 மாணவர்கள் சில நாள்களிலேயே குணமடைந்தனர்.

அதேநேரம் வாங் யுன் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஒரு மாணவர் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, “குற்றவாளியான வாங் யுன் பாடசாலையில் மாணவர்களுக்கு விஷம் கொடுப்பதற்கு முன்னர், கணவருக்கும் அதே போன்று விஷம் கொடுத்து கொலைசெய்ய முயன்றிருக்கிறார்.” என தெரிவித்தனர்.ஆனால், அவர் சிறியளவிலான பாதிப்புகளுடன் உயிர் பிழைத்திருக்கிறார். இந்த இரண்டு வழக்குகளிலும், பழிவாங்கும் நோக்கில் குற்றவாளி செயற்பட்டிருப்பது நிரூபணம் ஆனதால், வாங் யுன்-க்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.