;
Athirady Tamil News

உளவு பார்ப்பாங்க.. அரசு ஊழியர்கள் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்த அதிரடி தடை!!

0

அரசு துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷியா அதிரடி தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை முதல் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷிய வர்த்தக துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவின் தொலை தொடர்பு, அரசு ஊடகத் துறை என்று அரசு துறையை சேர்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். ஏற்கனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அனைத்து அரசு அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு பணிகளை மேற்கொள்வதற்காக ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த அரசு தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக அரசு அதிகாரிகள் அலுவல் பூர்வ தகவல் பரிமாற்றத்தை தவிர்த்து, தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும். அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, ரஷியாவின் ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மிக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அரசு ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

நேட்டோ நாடுகளில் வசிக்கும் ரஷிய அதிகாரிகள் பயன்படுத்தும் ஐபோன்களில் பிரத்யேக உளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்ததாக ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து இருப்பதோடு, பயனர் தனியுரிமையை பாதுகாப்பதில், மிக கடுமையாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.