;
Athirady Tamil News

தவிக்கும் உலக நாடுகள்: அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு IMF கோரிக்கை!!

0

எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரிசி தங்கு தடையின்றி கிடைக்கவும், அதன் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கவும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, மற்றும் பொது வினியோகத்திற்கான அமைச்சகம், ஜூலை 20 அன்று ‘பாஸ்மதி அல்லாத அரிசி’ ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. இந்த தடைகுறித்து செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் அரிசிக்கு பெரும் தேவை உருவானது. குறிப்பாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அரிசி கிடைப்பது சவாலானதால், அங்குள்ள கடைகளில் விலை பன்மடங்காக உயர்த்தப்பட்டது. இருப்பினும் மக்கள் முண்டியடித்து வாங்கி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடை குறித்து குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் (Pierre-Olivier Gourinchas) கூறியிருப்பதாவது:- இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம். எனவே இந்த தடையை நீக்க கோருகிறோம். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இந்த தடை தேவையற்றது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் இந்த நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டேனியல் லெய் (Daniel Leigh). அவர் கூறியிருப்பதாவது:- உலகம் முழுவதும் பணவீக்கம் குறைந்து வரும் சூழல் நிலவுகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் இதுபோன்ற கட்டுபாடுகள் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதனால் ஏற்படும் தாக்கத்தால் உலக அளவில் விலைவாசி உயருமே தவிர குறையாது. படிப்படியாக இந்த கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார தரவுகளின்படி 2024 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1% என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் 5.9% என சதவீதமாக மதிப்பிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.