;
Athirady Tamil News

குறைந்த அளவு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை பக்கவாத அபாயத்தை தடுக்காது- மருத்துவத்துறை ஆராய்ச்சியில் புதிய தகவல்!!

0

மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்களுக்கு அலோபதி மருத்துவத்தில் ஆஸ்பிரின் எனப்படும் மாத்திரையை நோயாளிகள் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட முதியவர்கள் மற்றும் 60 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்கள் இதய நோய்க்கான 10 சதவீத அபாயம் உள்ளவர்களுக்கு இதய நோய்க்கான முதன்மைத் தடுப்புக்காக குறைந்த அளவிலான ஆஸ்பிரின் பரிந்துரைக்கப்படுகிறது. இதயநோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த மாத்திரையை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். இதன் மூலம் பக்கவாதம் குறித்த அபாயம் குறையும் என்பது நம்பிக்கை.

இந்த நிலையில் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் குறைந்த அளவிலான ஆஸ்பிரின் மாத்திரைகள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தடுக்காது என கண்டறியப்பட்டு உள்ளது. பக்கவாதத்தைத் தடுக்கும் நோக்கத்துடன், இருதய நோய் இல்லாத முதியவர்கள் தினசரி குறைந்த அளவிலான ஆஸ்பிரின் உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. மாறாக மூளை திசுக்களில் ரத்த கசிவு அபாயத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்க மருத்துவ சங்கம்(ஜமா) வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் 19 ஆயிரத்து 114 முதியவர்களை ஈடுபடுத்தினர். அவர்களில் 9 ஆயிரத்து 525 பேர் 100 மில்லிகிராம் ஆஸ்பிரின் மாத்திரையும், 9 ஆயிரத்து 589 பேர் மருந்துப்போலி மாத்திரையும் பயன்படுத்தினர். 4½ ஆண்டுக்கு பின்னர் இவர்களிடையே ரத்த உறைவு தொடர்பான பக்கவாதம் எனப்படும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் பாதிப்பு வாய்ப்பு குறையவில்லை என்பதை கண்டறிந்தனர். தினசரி மருந்துப்போலி மாத்திரையை உட்கொள்பவர்களுடன் ஒப்பிடும்போது, தினசரி ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டவர்களிடையே 38 சதவிகிதம் மூளை திசுக்களுக்குள் ரத்தகசிவு கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பக்கவாதம் அல்லது மாரடைப்பு பாதிப்பு உள்ள யாரும் ஆய்வில் இருந்து ஈடுபடுத்தப்படவில்லை. இதுபற்றி எய்ம்ஸ் நரமியல்துறை பேராசிரியரும், தலைவருமான டாக்டர் எம்.வி.பத்மா ஸ்ரீவத்ஸவா கூறுகையில், நீண்டகாலமாக வல்லுனர்கள் கூறியதைதான் தற்போது ஆய்வு வலியுறுத்தி உள்ளது. பக்கவாதத்தை தடுக்க குறைந்த அளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை கண்மூடித்தனமாக பரிந்துரைக்க முடியாது. இதற்கான உரிய பரிசோதனைகள் அவசியம். குறிப்பாக தலையில் காயம் ஏற்படும் அபாயத்தில் இருக்கும் முதியவர்களுக்கு இது அதிக ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணத்திற்கு வழி வகுக்கும் என்றார். இதனிடையே ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்ததாலும், அவர்களில் 91 சதவீதம் பேர் ஆங்கிலேயர்கள் என்பதாலும் கண்டுபிடிப்புகள் பிற பகுதி மக்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

எனினும் வயதான நோயாளிகளுக்கு ரத்த உறைவு மற்றும் ரத்த கசிவை தடுப்பதில் எதிர்கொள்ளும் கடினமான சூழலை சரி செய்ய டாக்டர்கள் பயன் படுத்தும் ஆஸ்பிரின் சமநிலையான பலன்களை தரும் என்கின்றனர் நிபுணர்கள். ரத்தக் கட்டிகள் மற்றும் சிறிய ரத்த நாளங்களிலிருந்து பக்கவாதம் அடிக்கடி நிகழ்கிறது, அவை காலப்போக்கில் மிகவும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்பது அவர்களது கருத்து. கடந்த காலத்தில், சில டாக்டர்கள் ஆஸ்பிரின் ஒரு அதிசய மருந்து என்று கருதினர். இது ஆரோக்கியமான நோயாளிகளை எதிர்கால மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு எதிராக பாதுகாக்கும் திறன் கொண்டது என்றும் நம்பினர்.

ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. மேலும் இது ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தும் உருவாகி உள்ளது. இதனிடையே அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாரடைப்பு, பக்கவாதம், பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது இதய பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு இந்த பரிந்துரை பொருந்தாது” என்று வலியுறுத்தியது. மருத்துவரின் ஆலோசனையின்றி யாரும் ஆஸ்பிரின் உட்கொள்வதை நிறுத்தக் கூடாது என்றும் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.