இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!
இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை :
பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (73), ஆட்சிக்காலத்தில் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக அவருக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு பாகிஸ்தானில் பரவலாக அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இம்ரான் கானுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து தீர்ப்புக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்துக்கு இம்ரான் கான் தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் இந்தத் தீர்ப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசமைப்பை மீண்டும் நிலைநாட்ட வழக்குரைஞர்கள் முன்னணியானது களத்துக்கு வர வேண்டுமெனவும், நீதித்துறையால் மட்டுமே மக்களை பாதுகக்க முடியுமெனவும், தவறும்பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டு போராட்டத்துக்கு இம்ரான் கான அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2022இல் இம்ரான் கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின், அவருக்கெதிரான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அதனைத்தொடர்ந்து, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு 2023முதல் தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார் இம்ரான் கான்.
சிறையிலடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த தடை உள்ள நிலையில், அவரது எக்ஸ் கணக்கிலிருந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.