வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து நேபாளத்தில் போராட்டம் நடைபெற்றது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு காரணமான மாணவர் இயக்கத்தின் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி அந்நாட்டு பொதுத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டர்.
இவர் கடந்த 12 ஆம் தேதி தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடித்தது.
உஸ்மான் ஹாடியின் கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால், வங்கதேசத்திலுள்ள இந்திய தூதரகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்திய தூதரக அதிகாரிகள் இல்லத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
உஸ்மான் ஹாடியைக் கொன்றவர்கள் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி, ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஹிந்துக்களை குறிவைத்து தாக்குவது, ஹிந்து அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களை சேதப்படுத்துவதை கண்டித்து, நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேபாளத்திலுள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.