;
Athirady Tamil News

‘டைனோசர் கால உயிரினம்’ கேரளாவில் தண்ணீர் தொட்டிக்குள் வந்தது எப்படி?

0

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன், அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்த இந்தியர் ஒருவரை, ஹாலிவுட்டின் பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ அண்மையில் சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார். அவரது பாராட்டை அடுத்து, தற்போது அவர் உலக அளவில் கவனம் பெற்றுள்ளார்.

தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர் ஆபிரஹாம். துணை ராணுவப் படை முன்னாள் வீரரான இவர், கடந்த 2020ல் “பாதலா ஈல் லோச்” எனப்படும் அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்தார்.

நிலத்தடி நீரில் வாழும் தன்மையுடைய மீன் என்பதை குறிக்கும் விதத்தில், இந்த மீன் இனத்தின் பெயரில் ‘பாதலா’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. பாதலா என்றால், சமஸ்கிருதத்தில் “கால்களுக்கு கீழே” என்று பொருள்படும்.

சிறிய பாம்பை போன்ற இந்த மீன் வகை, பாறைகளின் பெரிய அடுக்குகள் மற்றும் நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் வண்டல் மண் கலந்த சகதி போன்ற நீர்நிலைகளில் வாழ்கின்றன.

கேரள மாநிலம், ஆலப்புழாவில் வசித்துவரும் ஆபிரஹாம், “பாதலா ஈல் லோச்” வகை மீனை, தான் தற்செயலாக கண்டுபிடித்ததாக கூறுகிறார்.

ஒருநாள் அவர் தமது வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீர் நிரம்பி இருந்த வாளியில் சிவப்பு நூல் போன்ற ஏதோ ஒரு பொருள் அவர் கண்ணில் தென்பட்டது. உடனே அதை ஆர்வமுடன் உற்றுநோக்கிய ஆபிரஹாம், அது நகர்வதைக் கண்டு மேலும் வியப்பில் ஆழ்ந்தார்.

சட்டென அதை பிடித்து, நீர் நிரம்பிய ஓர் கண்ணாடி குடுவையில் விட்ட அவர், இருப்பு கொள்ள முடியாமல் உள்ளூரில் தமக்கு தெரிந்த கல்லூரி பேராசிரியரான டாக்டர் பினோய் தாமஸை தொடர்பு கொண்டார்.
ஆராய்ச்சியாளர்கள் கண்ணில் சிக்கிய மீன்கள்

விஷயம் அறிந்ததும் ஆபிரஹாமை தாமஸ், மீன்வள மற்றும் கடல்சார் ஆய்வுகளுக்கான கேரள பல்கலைக்கழகத்தின் (Kufos) ஆராய்ச்சியாளர்களை தொடர்பு கொள்ள செய்தார்.

அடுத்த சில வாரங்களில், ஆபிரஹாம் வீட்டு கிணறு மற்றும் தண்ணீர் தொட்டியில் இருந்து அதே வகையான மேலும் நான்கு மீன்களை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த மீன்கள் கண்டுபிடிப்பு நிகழ்ந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் பிரச்சாரகருமான லியோனார்டோ டிகாப்ரியோ, ‘பாதலா ஈல் லோச்’ மீன்களின் வண்ணமயமான படத்தை கடந்த வாரம் தமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் இந்த அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்த ஆபிரஹாமையும் தமது பதிவில் அவர் வெகுவாக பாராட்டி இருந்தார். ஹாலிவுட் நடிகரின் பாராட்டை அடுத்து இந்த கண்டுபிடிப்பு பொதுவெளியில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

“ஒரு புதிய இனத்தை கண்டுபிடிப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் ஒரு சாதாரண நாளில் நடக்கிறது” என்று தமது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகர் டிகாப்ரியோ குறிப்பிட்டிருந்தார்.

மேலும் “அறியப்படாத நிலத்தடி சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு குடிமக்களின் அறிவியல் எவ்வளவு முக்கியமானது என்பதை அபிரஹாமின் இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது” என்று தமது பதிவில் லியோனார்டோ சிலாகித்து கூறியிருந்தார்.

மீன்கள் பொதுவாக ஆறுகள், ஏரிகள் அல்லது இதர நீர்நிலைகளில் வாழும் தன்மை கொண்டவை. ஆனால், ‘பாதலா ஈல் லோச்’ வகை மீன்கள் நிலத்தடி நீரில் வாழும் இனங்களைச் சேர்ந்தவையாக உள்ளன.

‘பாதலா ஈல் லோச்’ போன்று 17 -18 வகை மீன் இனங்கள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் குறைந்தபட்சம் 11 வகை மீன்கள் கேரளாவில் தான் இருக்கின்றன என்று பிபிசி ஹிந்தியிடம் கூறினார் Kufos பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான டாக்டர் ராஜீவ் ராகவன்.

அதிக எண்ணிக்கையிலான, நிலத்தடி நீரில் வாழும் இந்த மீன்கள் தனித்துவமானவை. ஏனெனில் இந்தியா, சீனா, மெக்சிகோ என்று உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இவ்வகை மீன்கள் காணப்படுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

“பாதலா ஈல் லோச் வகை மீன்கள் நிலத்தடி நீரில் வசிப்பவை என்பதால், இவை தற்செயலாக குழாய் வழியாக வெளியில் வரும்போது தான் அவற்றை பிடிக்க இயலும்” என்கிறார் ராகவன்.

கிணறுகளுடன் இணைக்கப்பட்டுள்ள நீர்நிலைகள், கோடைக்காலத்தில் வற்றும்போதும் அங்கு சில நேரம் இவ்வகை மீன்கள் தென்படலாம் என்கின்றனர் அவர்கள்.

கேரளாவை பொறுத்தவரை, இந்தியாவிலேயே அதிகமாக கிணறுகளை கொண்ட வீடுகள் இந்த மாநிலத்தில் தான் உள்ளன. கேரளாவின் மலைப்பகுதிகள் மற்றும் நடுநிலப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சுமார் ஏழு மில்லியன் கிணறுகள் இருக்கின்றன.

ஆபிரஹாமின் கண்டுபிடிப்பை பொறுத்தவரை, நிலத்தடி நீரில் இருந்த மீன், முதலில் அவரது வீட்டில் இருக்கும் கிணற்றுக்கு சென்றிருக்கலாம். அங்கிருந்து அவரது வீட்டின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டிக்கு பயணித்து, இறுதியில் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது குழாய் வழியாக அவரது வாளியை மீன் வந்தடைந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

“இந்த கண்டுபிடிப்பு ஓர் தற்செயல் நிகழ்வுக்கான உதாரணம்” என்று கூறுகிறார் டாக்டர் ராகவன்.

1950கள் வரை, நிலத்தடி நீரில் வாழும் மீன்கள் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கேரள மாநில அரசின் நிதியுதவியுடன், Kufos பல்கலைக்கழகம் 2015 இல் முன்னெடுத்த ஆய்வு திட்டத்தின் மூலம், மாநிலத்தில் இந்த வகை மீன்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பின், பல்கலைக்கழகம் உருவாக்கிய குடிமக்கள் அறிவியலுக்கான வலையமைப்பின் மூலம் இந்த மீன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வகை மீன்கள் தண்ணீர் குழாய் வழியாக வாளி போன்றவற்றில் தென்படலாம் என்றும், வறண்ட நிலையான கிணற்றிலும் இவை இருக்கலாம் என்றும் மக்களுக்கு போதிக்கப்பட்டது.

“இதுபோன்று எங்கேனும் மீன்கள் தென்பட்டால் அதுகுறித்து எங்களுக்கு அலைபேசி மூலமோ, குறுஞ்செய்தி மூலமோ தகவல் தரும்படி பொதுமக்களை அறிவுறுத்தி இருந்தோம். அதன்படியே, கேரளாவில் மொத்தம் 11 அரிய வகைகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மீன்களை சேகரித்துள்ளோம்” என்கிறார் டாக்டர் ராகவன்.

பரிணாம வளர்ச்சியின் படியும் ‘பாதலா ஈல் லோச்’ வகை மீனின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

“நிலத்தடி நீரில் வாழும் பெரும்பாலான மீன்கள் பழமையானவை” என்கிறார் டாக்டர் ராகவன். அத்துடன் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள 11 வகை அரிய மீன் இனங்களில் ஒரு வகை மீனின் தோற்றம் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த வகை மீன்கள் பூமியில் சுற்றித் திரிந்தன என்கிறார் அவர்.

“அதாவது நிலத்தடி கட்டமைப்பில் வாழும் அனைத்து வகை மீன்களும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியவையாக உள்ளன” என்கிறார் உதவி பேராசிரியர் ராகவன்.

ஆபிரஹாமை பொருத்தவரை, “பாதலா ஈல் லோச்” வகை மீனின் கண்டுபிடிப்பு ஆரம்பம் முதலே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தது. ஆனால், இதுகுறித்து ஹாலிவுட் சினிமா நட்சத்திரமான லியோனார்டோ டிகாப்ரியோ, இன்ஸ்டாகிராமில் பேசியதில் இருந்து இந்த கண்டுபிடிப்பு உலக அளவில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

“ஹாலிவுட் பிரபலமான டிகாப்ரியோ தனது பெயரை குறிப்பிட்டு பாராட்டி இருப்பதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன்” என்கிறார் ஆபிரஹாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.