;
Athirady Tamil News

ஊழலை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் தான்- ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஸ்மிருதி பதிலடி!!

0

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து “இந்தியா” என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி தற்போது நடந்து வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் ஒருங்கிணைந்து இயங்க தொடங்கி உள்ளன. பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக “இந்தியா” கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முதல் நாள் விவாதம் நடைபெற்றது. மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்-மந்திரி பைரேன்சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 2-வது நாள் விவாதம் நடந்தது. 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் வழக்கம் போல கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது கடும் கூச்சல் நிலவியதால் சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு 12 மணிக்கு சபை மீண்டும் கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. நேற்றே பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ராகுல் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை பூர்த்தி செய்யும் வகையில் ராகுல்காந்தி எதிர்க்கட்சிகள் சார்பில் எழுந்து பேசினார். தொடக்கத்திலேயே அவரது பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

என்றாலும் கடும் கூச்சல்-குழப்பங்களுக்கு மத்தியில் ராகுல் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:- என்னை மீண்டும் எம்.பி.யாக அமர்த்தியதற்கு முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடைசியாக நான் பேசிய போது அதானி பற்றி குறிப்பிட்டேன். இது உங்களை காயப்படுத்தி இருக்கலாம் உங்கள் மூத்த தலைவர் வேதனைப்பட்டு இருக்கலாம். அந்த வலி உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் உண்மையைத்தான் பேசினேன். தற்போது நான் அதானி பற்றி பேசமாட்டேன். இதனால் பா.ஜனதா உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம். மணிப்பூரை பற்றி தான் நான் பேசுவேன். (அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பா.ஜனதா எம்.பி.க்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.) நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருங்கள். நான் எனது மனதில் இருந்துதான் பேசுகிறேன். நான் பேசத் தொடங்கியவுடன் சிலர் வெறுப்புடன் கோஷமிட்டனர். நான் 130 நாட்கள் ஒற்றுமை இந்தியா என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டேன். ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு மக்களுடன் யாத்திரை செய்தேன். இந்த யாத்திரையில் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். யாத்திரையின் போதும், அதன் பிறகும் நிறைய பேர் என்னிடம் ஏன் யாத்திரை செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாட்டை புரிந்து கொள்வதற்காகவே யாத்திரையை தொடங்கினேன்.

யாத்திரையின்போது விவசாயி ஒருவரிடம் பேசியபோது, அவரது இதயத்தில் இருந்த வலி என் இதயத்துக்கு இடம் மாறியது. அன்பை செலுத்தவே நடைபயணம் மேற்கொண்டிருப்பதை பிறகு புரிந்து கொண்டேன். என் யாத்திரை இன்னும் முடியவில்லை. நான் நம்பும் விஷயத்துக்காக உயிரை விடவும், பிரதமர் விரும்பினால் நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன். இதயத்தில் இருந்து பேசும் பேச்சு இதயங்களை சென்றடையும் என்பதால் இதயத்தில் இருந்து பேச போகிறேன். மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் ஏன் செல்லவில்லை? ஆனால் நான் சென்றிருந்தேன். அங்கு முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் மணிப்பூர் நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் பிரதமர் அங்கு செல்லவில்லை. நிவாரண முகாமில் இருந்த பெண்ணிடம் பேசியபோது, தன் கண் முன்னே ஒரே மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

மற்றொரு முகாமில் பெண்ணிடம் உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது அவர் பேச முடியாமல் மூர்ச்சை அடைந்தார். நினைத்து பார்க்கவே முடியாத பயங்கரமான சம்பவங்கள் பெண்களுக்கு நடந்துள்ளது. மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ஆனால் அதை செய்யவில்லை. இந்தியா என்ற சித்தாந்தத்தையே அரசு கொன்றிருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணமாகி உள்ளது. பாரத தாய் மணிப்பூரில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை நீங்கள் மணிப்பூரில் கொன்றிருக்கிறீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல.

நீங்கள் தேச துரோகிகள். ராவணனின் அகங்காரத்தால் இலங்கை எரிந்தது. அரசின் அகங்காரத்தால் மணிப்பூர், அரியானா போன்ற மாநிலங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் பேச்சை ராவணன் கேட்டுக்கொண்டு இருந்தார். தற்போது அமித்ஷா மற்றும் அதானி பேச்சை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு இருக்கிறார். ராவணன்கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார். ராகுல்காந்தி பேசிக் கொண்டிருந்தபோது பா.ஜனதா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பிய படியே இருந்தனர். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பினர்.

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பா.ஜனதா உறுப்பினர்கள் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினார்கள். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ராகுல், ராகுல் என்று கோஷம் எழுப்பினர். அவர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தினார். அதை தொடர்ந்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதாவது:- ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். மிக மோசமான பேச்சை நாம் இங்கு கேட்டோம். அதை கண்டிக்கிறேன். நீங்கள் இந்தியா கிடையாது. ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ்தான். எதிர்க்கட்சியினர் ஊழலை பிரதிபலிக்கின்றனர் என்பதால் அவர்கள் இந்தியா அல்ல. ஊழலை பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை பாருங்கள்.

பாரத தாய் கொலை செய்யப்பட்டதாக கூறிய ராகுலின் பேச்சை நாடு மன்னிக்காது. பாரத தாயை அவர் இழிவுப்படுத்தி விட்டார். மணிப்பூர் துண்டாடப்படவில்லை. அது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. பாரத தாயை கொன்றதாக ராகுல் காந்தி பேசும் போது எதிர்க்கட்சியினர் மேஜையை தட்டி ஆமோதித்தனர். இதை ஏற்க முடியாது. மிகவும் கண்டனத்துக்குரியது. காஷ்மீர் பண்டிட்டுகளை காங்கிரஸ் புறக்கணித்தது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக காங்கிரஸ் என்ன செய்தது. காஷ்மீரின் உண்மையான நிலையை அறிந்து கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. காஷ்மீரில் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது பெரும் கொடுமைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன.

ராஜஸ்தானில் அநீதி இழைக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தான் செல்ல இருக்கிறார். அங்கு பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். பெண்களை பாதுகாக்க காங்கிரஸ் தவறி விட்டது. மேற்கு வங்காளத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். இந்த சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

தி.மு.க. எம்.பி.க்கள் வட இந்தியாவை மட்டுமே இந்தியா என்று கூறுகின்றனர். அவர்களின் இந்த கருத்துக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பாராளுமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. பா.ஜ.க. எம்.பி.க்களும், காங்கிரஸ் எம்.பி.க்களும் ஒருவர் மீது ஒருவர் பயங்கர குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால் பாராளுமன்றத்தில் அனல் பறந்தது. குறிப்பாக ராகுல் பேசும் போது ஆளும் கட்சி தரப்பில் கடும் அமளி ஏற்பட்டது. அதுபோல மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசும்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.