;
Athirady Tamil News

கல்வி முறையை மாற்றாவிடின் எதிர்காலம் இல்லை !!!

0

தற்போதைய கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை என்றும் புதிய கல்வி முறையின் மூலமே நாம் முன்னேற முடியும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் 2019/2020 வருடாந்த பரிசளிப்பு விழாவில் புதன்கிழமை (16) பிற்பகல் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “சமுதாயத்திற்கு ஏற்ற கல்வி முறை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், நல்ல எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும். சவால்களை முறியடிக்கக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை கல்வியால் மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய, எதிர்காலத்தைப் பற்றிய புரிதல் கொண்ட கல்வி முறைமையை நம் நாட்டில் உருவாக்க வேண்டும்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். ஐரோப்பா தீப்பற்றியெறியும் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது.

அதனால் தான், ஐக்கிய நாடுகள் சபை காலநிலை மாற்ற நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் காலத்தை 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளி அதனை துரிதப்படுத்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மற்றைய விடயம், உலகப் பொருளாதாரம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளது.செயற்கை நுண்ணறிவு, ரோபா தொழிநுட்பம், வலு சக்தி சேமிப்பு, பிளொக் செயின் தொழில்நுட்பம், ஜெனொம் விஞ்ஞானம் ஆகிய சில துறைகள் மாத்திரம் உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.

இந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகப் பொருளாதாரத்தில் 300 முதல் 700 டிரில்லியன் டொலர் வரையிலான பாரிய பெறுமதி இணையும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.இந்த பொருளாதாரத்துடன் தான் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.

அரசியல்வாதிகள் கடந்த காலத்தைப் பற்றி மாத்திரமே சிந்திக்கிறார்கள். மாணவர்களாகிய நீங்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்கிறீர்கள். ஆனால் நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம்.

எனவே இதை சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களை எப்படியாவது நிகழ்காலத்திற்கு கொண்டு வர வேண்டும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. புதிய கல்வி முறையின் மூலமே நாம் முன்னேற முடியும். தொழிற்சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வீதிகள் அமைக்க முடியும், என்றாலும் கல்வி அறிவு இல்லாமல் எதிர்காலம் இல்லை. எனவே, புதிய கல்வி முறையை உருவாக்கி நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.