;
Athirady Tamil News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் தயாராகும் புதிய வடிவிலான விநாயகர் சிலைகள்!!

0

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதுதவிர பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர். கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிள்ளையார் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அங்கு சனீஸ்வரருடன் அமர்ந்திருக்கும் பிள்ளையார், விவசாய விநாயகர், கடல்கன்னி உருவத்தில் அருள்பாலிக்கும் பிள்ளையார், சிங்க வாகனங்களில் எழுந்தருளிய விநாயகர். முருகன் புல்லட் ஓட்ட பின்சீட்டில் பயணிக்கும் பிள்ளையார், ராஜகணபதி, டிராகனில் வீற்றிருக்கும் விநாயகர், மயில் மீது அமர்ந்த பிள்ளையார், சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறுகையில், நாங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் சிலைகளையும், பொதுஇடத்தில் வைப்பதற்காக பிரமாண்ட வடிவில் சிலைகளையும் தயாரித்து வருகிறோம். நாங்கள் வடிவமைக்கும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும். அதாவது தண்ணீரில் எளிதாக கரையும் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன.

சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம். அப்படி தயாராகும் சிலைகளை 2, 3 நாட்கள் காயவைத்து, அதன்பிறகு சிமெண்ட் பேப்பர் ஒட்டி, அதில் வாட்டர் கலர் மூலம் பெயிண்ட் அடித்து சிலைகள் செய்கிறோம். அவற்றில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பது இல்லை. எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எனவே பிள்ளையார் சிலைகளின் விலையும் தற்போது சிறிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி சிறிய அளவிலான சிலைகள் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டு வருகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதம் முதலே பணிகளை தொடங்கி விட்டோம். எங்களுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்து உள்ளன என தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.