பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! அரசு அதிகாரிகள் 4 பேர் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், அரசு அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஜௌர் மாவட்டத்தின், நவாகை தாலுக்காவின் துணை ஆணையரின் வாகனத்தின் மீது நேற்று (ஜூலை 2) வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், துணை ஆணையர் ஃபைசல் சுல்தான், காவல் உதவி ஆய்வாளர் நூர் ஹக்கிம், தாசில்தார் வாகில் கான் மற்றும் காவல் துறை அதிகாரி ரஷீத் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இத்துடன், படுகாயமடைந்த அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.