சாட்ஜிபிடி-யை அதிகம் நம்ப வேண்டாம்! சொல்வது ஓபன்ஏஐ தலைவர்
சாட்ஜிபிடியை மக்கள் அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் சாம் ஆல்ட்மன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓபன்ஏஐ-யின் அதிகாரப்பூர்வ பாட்காஸ்ட் அறிமுக விழாவில் பேசிய ஆல்ட்மன், சாட்ஜிபிடியை மக்கள் அதிகம் நம்புகிறார்கள் என்ற மிக ஆச்சரியமான விஷயத்தை தான் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என்பது தவறான தகவல்களை அளிக்க முடியாதது அல்ல மற்றும் தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியதே, எனவே, அதனை இந்த அளவுக்கு மக்கள் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓபன்ஏஐ-க்கு சொந்தமான சாட் ஜிபிடி குறித்து அவர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மக்கள் சாட்ஜிபிடி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம். ஏனென்றால் செயற்கை நுண்ணறிவும் தவறுகளை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தங்களது தகவல்களைப் பயன்படுத்தியதற்காக, சில முன்னணி ஊடகங்களின் சட்ட ரீதியான வழக்குகளை ஓபன் ஏஐ எதிர்கொண்டிருக்கும் நிலையில்தான், ஆல்ட்மன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எங்களது தயாரிப்பு தொடர்பாக நேர்மையான சில விஷயங்களைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். தற்போதைய தொழில்நுட்பத்தின் உண்மைத்தன்மை என்பது மிகச் சிறப்பானது அல்ல என்றும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.