;
Athirady Tamil News

இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கத்தால் வீரர்களுக்கு என்ன பிரச்னை? பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியுமா?

0

வரும் செப்டம்பர் 16 முதல் 24ம் தேதி வரை செர்பியாவின் பெல்கிரேட் நகரில் நடைபெறவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நூற்றுக்கணக்கான மல்யுத்த வீரர்கள் தங்களால் இயன்றவரை போராடி வெற்றிபெற முயற்சி செய்வார்கள்.

இந்த போட்டியில் எந்தெந்த இந்திய வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பது பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் நடந்துவரும் போட்டிகளுக்குப் பின்னர் தான் தெரியவரும்.

மேலும், பெல்கிரேட் நகரில் நடைபெறும் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்கள் 2024ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக நுழைவார்கள் என்பதால் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியும் முக்கியமானது.

ஆனால் இத்தனைக்கும் இடையில் ஆகஸ்ட் 24 அன்று வந்த ஒரு செய்தி இந்திய வீரர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் இனி இந்திய மல்யுத்த வீரர்கள் இந்தியாவின் சார்பில் விளையாட முடியாது என்பதுடன், பதக்கம் வென்ற பிறகு இந்திய தேசிய கீதம் இசைக்கப்படாது என்றும் அந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் நேரடியாக நுழைவதை மல்யுத்த வீரர்கள் மறந்துவிடவேண்டியதுதான்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தலை சரியான நேரத்தில் நடத்த முடியாததால், உலக மல்யுத்த சம்மேளனம் அதன் உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது .

ஆனால், உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்தும் சரியான நேரத்தில் தேர்தலை நடத்த முடியாமல் போனது ஏன் என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி. இதற்குக் காரணமானவர்கள் யார்?

முதலில், இந்த இடைநீக்கத்தைத் தொடர்ந்து மிகவும் கோபமாக இருக்கும் மல்யுத்த வீரர்களைப் பற்றித் தான் பேசவேண்டும்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், இடைநீக்க முடிவிற்குப் பிறகு பேசிய போது, ஆகஸ்ட் 24ம் தேதி இந்திய மல்யுத்த விளையாட்டின் கருப்பு நாள் என்று கூறினார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அவரது கையாட்களின் தவறால் இந்திய நாட்டின் மல்யுத்த வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் .

“மூவர்ணக் கொடி நமது நாட்டின் பெருமை. போட்டிகளில் வென்று பரிசுகளைப் பெற்ற பிறகு மூவர்ணக் கொடியுடன் களத்தில் ஓட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். இந்த பிரிஜ்பூஷன் சரண் சிங்கும் அவரது ஆட்களும் நாட்டுக்கு மிகப்பெரும் கேட்டை இழைத்துள்ளனளர்.”

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், இந்த செய்தி மல்யுத்த விளையாட்டிற்கு ஒரு பெரிய அடி என்று கூறினார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் , “மாநில அளவில், தேசிய அளவில் மற்றும் நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றுவரும் இளம் வீரர்களே எங்களுடைய பெரிய கவலையாக இருந்துவருகிறது. இன்று மல்யுத்தம் அனைத்து வகையிலும் அடக்கப்பட்டு வருவது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம். உண்மையில், இது முழு மல்யுத்த உலகத்தின் சுரண்டல்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற மோசமான நிலைக்கு பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தான் காரணம் என்றும், அவராலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஒலிம்பியன் பஜ்ரங் புனியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீரர் வினேஷ் போகட் தமது ட்விட்டர் பதிவில், “பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் இந்திய மல்யுத்த விளையாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம், அதை சரியாக மதிப்பீடு செய்யும் போது மட்டுமே, அதன் மூலம் என்னவென்று தெரியவரும். ஒரு மாஃபியாவால் மூவர்ணக்கொடி அவமதிக்கப்பட்டுள்ளது,” எனத்தெரிவித்துள்ளார்.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் பெற்ற வின், மூவர்ணக் கொடியுடன் களத்தில் ஓடும் வாய்ப்பு பறிபோனதாக இந்திய வீரர்கள் கலை தெரிவித்துள்ளனர்.

ஜூலை 3ஆம் தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்துமாறு உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவுறுத்தியதாகவும், ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இப்போது இந்திய மல்யுத்த வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சொந்தக் கொடியின் கீழ் விளையாட வேண்டும் என்றும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர்களாக எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்றும் உலக மல்யுத்த கூட்டமைப்பு கூறியுள்ளது.

விளையாட்டு செய்தியாளர் ஆதேஷ் குமார் குப்தா கூறும்போது, ​​“மல்யுத்த வீரர் தங்கப் பதக்கம் வென்றால், அவரது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அதை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பார்க்க முடியாது,” என்றார்.

இதுமட்டுமின்றி, தற்போதைய போட்டியில் வெற்றி பெறும் இந்திய மல்யுத்த வீரர்கள் 2024-ம் ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்தியாவின் சார்பில் நேரடியாக விளையாட முடியாது. இதில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு நிலையான ஒதுக்கீடு உள்ளது. இது போன்ற நிலையில், இந்திய வீரர்கள் இந்தியாவின் தேசிய கொடியின் கீழ் விளையாடவில்லை என்றால், அவர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்காது.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ‘கோட்டா’ என்பது எந்த ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரருக்கும் சொந்தமானது அல்ல. ஆனால், அது தேசிய அணிகளுக்குக் கிடைக்கும் ஒன்றாகவே உள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவர் மீது பாலியல் புகார்களை எழுப்பிய வீராங்கனைகள் புகாரின் முது அரசின் நடவடிக்கை கோரி டெல்லியில் தொடர்ந் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளில் அடிப்படைச் சேவைகள் கிடைக்கவில்லை, நிதி முறைகேடுகள், வீராங்கனைகள் தேர்வு மற்றும் தன்னிச்சையான அணுகுமுறை ஆகியவை அடங்கும். ஆனால் அவர் மீதான மிகக் கடுமையான குற்றச்சாட்டு என்பது பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகும்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது, ஆனால் விசாரணை அறிக்கையில் அதிருப்தி அடைந்த மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் டெல்லிக்கு திரும்பி ஏப்ரல் 23 அன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

அப்போது அரசுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளை உணர்ந்து, நான்கு நாட்களுக்குப் பிறகு, விளையாட்டு அமைச்சகம் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கான தேர்தலை நிறுத்தி, அதன் செயல்பாட்டுப் பொறுப்பை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் ஒப்படைத்தது. இதற்காக மூன்று பேர் கொண்ட தற்காலிகக் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த தற்காலிகக் குழுவின் பொறுப்பு பூபேந்திர சிங் பஜ்வாவுக்கு வழங்கப்பட்டது. அவர் இப்போது இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் நிர்வாகங்களைக் கவனிக்கவேண்டும் என்பதுடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவிற்கு 45 நாட்களில் தேர்தலையும் நடத்த வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மகேஷ் மிட்டல் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது ஏன்?

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகத்தில் செயற்குழு தலைவர், முதன்மைச் செயலாளர், பொருளாளர், மூத்த துணைத் தலைவர் ஆகியோருடன் 2 இணைச் செயலாளர் பதவிகளும், 4 துணைத் தலைவர் பதவிகளும், 5 செயற்குழு உறுப்பினர் பதவிகளும் உள்ளன.

மல்யுத்த சம்மேளனத்தின் மாநில மற்றும் யூனியன் பிரதேச பிரிவுகளின் இரண்டு உறுப்பினர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

அட்ஹாக் கமிட்டி ஜூலை 11 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அசாம் மல்யுத்த கூட்டமைப்பு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தை அணுகியது.

அசாம் மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்த சங்கத்தில் உறுப்பினராக இருப்பதற்கும் உரிமை உண்டு என்றும், அதன் இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்கும் உரிமையைப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறியது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தலுக்கு தடை விதித்து, பின்னர் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அசாம் மாநிலமும் வாக்களிப்பதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 50 உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அசாம் பிரச்சனையைத் தீர்த்த பிறகு, அட்ஹாக் கமிட்டி மீண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதியை தேர்தலுக்கான தேதியாக நிர்ணயித்தது. ஆனால் இந்த முறை ஹரியானாவில் இரண்டு மல்யுத்த சங்கங்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தை நாடின.

ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கம், ‘ஹரியானா மல்யுத்த சங்கம்’ என்பதற்கு பதிலாக, தங்கள் இரு உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற வேண்டும் என்று ‘ஹரியானா அமெச்சூர் மல்யுத்த’ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 28ம் தேதி வரை தேர்தலை நடத்த தடை விதித்தது.

தம்மீதான பாலியல் புகார்கள் பொய்யானவை என பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து கூறிவருகிறார்.

இந்த முறை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பதவிக்கான தேர்தலில் அனிதா ஷியோரன் மற்றும் சஞ்சய் குமார் சிங் ஆகிய இரு வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

ஹரியானாவில் இருந்து வரும் அனிதா ஷியோரனிடம் பிபிசி பேசியது. உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாதது குறித்தும், மல்யுத்த சங்கத்தை இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

“உலக மல்யுத்த கூட்டமைப்பு சரியான நேரத்தில் தேர்தலை நடத்துமாறு பலமுறை அறிவுறுத்தியும் தேர்தலை நடத்த முடியவில்லை. இந்த முறை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மூவர்ணக் கொடியின் கீழ் நமது வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இது அவர்களின் மன உறுதியை பாதிக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு கூட்டமைப்பிலும் ஒரு பெண் இருப்பது அவசியம். கடந்த சில ஆண்டுகளாக பெண் வீராங்கனைகள் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு உள்ளாகும் விதத்தை கருத்தில் கொண்டு, பெண்களை வெவ்வேறு நிலைகளில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. நான் 20 ஆண்டுகளாக மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று வருகிறேன். இதன் மூலம் பெண்களின் பிரச்சினைகளை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது,” என்றார்.

உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்திய மல்யுத்த சம்மேளத்தின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் தான் காரணம் என விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் சங்க நடைமுறை விதிகளின்படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒருவர் மூன்று முறை அல்லது 12 ஆண்டுகளுக்கு மேல் தலைவராக இருக்க முடியாது.

இந்த விதியின் காரணமாக, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், 12 ஆண்டுகளாக நீடித்த இந்தப் பதவியில் இருந்து விலகியிருந்தார். விதிகளின்படி அவர் இப்போது தேர்தலில் கூட போட்டியிட முடியாது.

பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த பெண் மல்யுத்த வீராங்கனைகனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாக போராட்டம் நடத்தியும், அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.

தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் ஜாமீனில் இருக்கிறார்.

ஆதேஷ் குமார் குப்தா கூறும்போது, ​​“மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாதாக புகார் எழுந்தது. மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், அல்லது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விரும்பினால், வீராங்கனைகளின் குற்றசாட்டுக்களுக்கு மதிப்பளித்து இருக்கலாம். ஆனால் அவரைத் தப்பவைக்கும் அணுகுமுறையால், இந்திய விளையாட்டுத் துறை சிரமங்களைச் சந்தித்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இனிமேல் என்ன நடவடிக்கை எடுக்கும் எனத்தெரியாது. அல்லது சிறிது காலம் தேவைப்படுவதாக நினைத்திருக்கலாம். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை,” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் பொறுப்பை தற்காலிகமாக இடை நீக்கம் செய்துள்ளது இதுவே முதல் முறை. இதனால் ஏராளமான வீரர்கள் பல்வேறு இழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.