;
Athirady Tamil News

திருப்பதி அலிபிரி நடைபாதையில் 4-வது சிறுத்தை கூண்டில் சிக்கியது!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் தந்தையுடன் சென்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்றது. அதனை சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவரும் விடாமல் விரட்டி சென்றதால் சிறுத்தை சிறுவனை வனப்பகுதியில் போட்டுவிட்டு சென்று விட்டது. சிறுவன் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தான். இதனையடுத்து கூண்டு அமைக்கப்பட்டது. அதில் சிறுத்தை ஒன்று சிக்கியது. கடந்த மாதம் அலிபிரி நடைபாதையில் பெற்றோரை விட்டு முன்னாள் வேகமாக ஓடிய 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்று கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அலிபிரி நடைபாதையில் பல்வேறு இடங்களில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன. இதில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் பிடிபட்டன. நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தினமும் 100 பேர் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதில் 7-வது மைல் கல் அருகே ஒரு சிறுத்தை கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடமாடி வந்தது. இந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள 50 கண்காணிப்பு கேமராக்களில் மாறி மாறி பதிவாகி இருந்தது. இதனைப் பிடிக்க 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் வைத்திருந்தனர். 10 நாட்களாக தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிறுத்தை கூண்டுக்கு அருகில் வந்துவிட்டு உள்ளே செல்லாமல் பல நேரங்களில் தப்பி சென்றது. இந்த நிலையில் அலிபிரி 7-வது மைல்கல் அருகே வைக்கப்பட்ட கூண்டில் இன்று அதிகாலை சிறுத்தை சிக்கியது.

இதனை வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பதி வன உயிரின பூங்காவுக்கு கொண்டு சென்றனர். திருப்பதியில் கடந்த 60 நாட்களில் 4-வது சிறுத்தை பிடிபட்டுள்ளது. பிடிப்பட்ட 4 சிறுத்தைகளும் அங்குள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் வனப்பகுதியில் விடக்கூடாது என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அலிப்பரி நடைபாதை அருகே சுற்றித்திரிந்த 4 சிறுத்தைகளும் பிடிபட்டுவிட்டன. இங்கு மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லை. பக்தர்கள் அச்சமின்றி நடை பாதை வழியாக தரிசனத்திற்கு வரலாம் ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவஸ்தானம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.